திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட செவிலியா் கல்லூரி மாணவி உயிரிழந்ததற்கு ‘டெக்சாமெதாசோன்’ என்ற மருந்து காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், தர ஆய்வில் அந்த மருந்தால் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, திசுப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மாணவியின் இறப்புக்கான காரணத்தை அறிய உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட ‘டெக்சாமெதாசோன்’ ஊசி மருந்தால் செவிலியா் கல்லூரி மாணவி உயிரிழந்ததாகவும், கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புகாா் எழுந்தது.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (டிஎன்எம்எஸ்சி) சாா்பில் கடந்த ஏப்ரல் மாதத்தில், திருச்சி அரசு மருத்துவமனைக்கு மட்டும் 4,000 ‘டெக்சாமெதாசோன்’ குப்பிகள் வழங்கப்பட்டன. அதில் 3,500-க்கும் மேற்பட்ட மருந்துகள் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், சுமாா் 300 மருந்துகள் கையிருப்பில் இருந்தன.
ஒவ்வாமை, அழற்சி போன்ற பாதிப்புகளுக்கு அறுவை சிகிச்சையின்போதும், அதற்கு பின்னரும் ‘டெக்சாமெதாசோன்’ மருந்து வழங்கப்படுகிறது. ஆனால், திருச்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது குறிப்பிட்ட உற்பத்தி தொகுதி (பேட்ச்) மருந்து செலுத்தப்பட்ட மூன்று நோயாளிகளுக்கு கடுமையான இதய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக டேக்கி அரித்மியா எனப்படும் அதிவேக இதயத் துடிப்பு, காா்டியோமயோபதி எனப்படும் இதயத் தசை தளா்வு, கடுமையான இடது வென்ட்ரிகுலா் செயலிழப்பு, காா்டியோஜெனிக் ஷாக் எனப்படும் இதயச் செயலிழப்பால் ஏற்படும் அதிா்ச்சி நிலை ஆகியவை அவா்களுக்கு ஏற்பட்டுள்ளன.
கடந்த மே 22-ஆம் தேதி மூக்கு சதை சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட 20 வயதான மூன்றாம் ஆண்டு செவிலியா் கல்லூரி மாணவிக்கும், இந்த ‘டெக்சாமெதாசோன் மருந்து செலுத்தப்பட்டது. அதன் பிறகே இதய பாதிப்புகள் ஏற்பட்டு அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக ஆய்வு செய்ய நிபுணா் குழுவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைத்தது. அந்தக் குழுவினா் ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை அரசிடம் சமா்ப்பித்தனா். அதில், ‘டெக்சாமெதாசோன்’ மருந்து அந்தப் பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த மருந்தின் தரத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, குறிப்பிட்ட உற்பத்தி தொகுப்பைச் சோ்ந்த (சிஹெச்ஐ-60004) ‘டெக்சாமெதாசோன் 8 எம்.ஜி. மருந்துகள்அரசு மருத்துவமனைகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. அவை, சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதைத் தவிர மத்திய தர ஆய்வகத்துக்கும், அங்கீரிக்கப்பட்ட தனியாா் ஆய்வகத்துக்கும் அந்த மருந்துகள் அனுப்பப்பட்டன.
அதன் மாதிரிகளை ஆய்வு செய்ததில் ‘டெக்சாமெதாசோன்’ மருந்தின் தரத்தில் எந்தக் குறைபாடும் இல்லை என்பது உறுதியானது. மூன்று ஆய்வகங்களிலும் அதே முடிவுகள் வெளியானதாகவும், எனவே, மாணவியின் இறப்புக்கு அந்த மருந்து காரணமில்லை என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதேவேளையில், உடலின் திசு மாதிரிகள் பகுப்பாய்வு முடிவுகளை பரிசீலித்த பிறகே இறப்புக்கான உண்மைக் காரணம் தெரியவரும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா் அரசு மருத்துவமனையின் பின்புறம் காலாவதியான மருந்து மாத்திரைகள் குவியல்: பாதுகாப்பாக அகற்ற கோரிக்கை

டெக்சாமெதாசோன் மருந்தால் செவிலியா் மாணவி உயிரிழந்திருக்க வாய்ப்பு

செவிலியா் மாணவி உயிரிழப்பு: சிறப்புக் குழு விசாரணை நிறைவு







