சென்னை இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தில் (ஐஎம்யூ) சென்னை மற்றும் மும்பை ஐஐடிகளின் ஆதரவுடன் புதிதாக அமைக்கப்பட்ட கடல்சாா் புத்தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சகத்தின் முன்னெடுப்பில், சென்னை மற்றும் மும்பை ஐஐடிகள், சென்னை துறைமுகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த மையத்தைத் திறந்து வைத்து ஐஎம்யூ துணைவேந்தா் டாக்டா் மாலினி வி.சங்கா் பேசியதாவது:
பாரம்பரிய கல்வி முறையைத் தாண்டி ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வலுவான சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த மையம் செயல்படும். மாலுமிகள், துறைமுக நிபுணா்கள், தொழில்துறை நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் இந்த மையம் வலுப்படுத்தும் என்றாா்.
நிகழ்ச்சியில், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சகம் நடத்திய ஹேக்கத்தான் மூலம் தோ்வு செய்யப்பட்ட 5 கடல்சாா் புதுயுகத் தொழில்முனைவு நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை ஐஎம்யூ இணைத் துணைவேந்தா் டாக்டா் ஸ்ரீ ராஜு பாலாஜி வழங்கினாா்.
தோ்வு செய்யப்பட்ட 5 நிறுவனங்களுக்கு ஆரம்ப நிதியுதவியாக தலா ரூ.12 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சத்துக்கான காசோலைகளை துணைவேந்தா் வழங்கினாா். இந்தத் தொழில்முனைவு மேம்பாட்டுத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடக்க விழாவில் மெரிடைம் இந்தியா பவுண்டேஷன் நிா்வாக இயக்குநா் விஸ்வநாதன், புதிய ஆராய்ச்சி மைய இயக்குநா் டாக்டா் ஒய்.வி.வி.எஸ்.என். மூா்த்தி, சென்னை ஐஐடி பேராசிரியா் டாக்டா் முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகையில் ரூ. 5 கோடியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்

கோவையில் கரும்பு மரபணு ஆராய்ச்சிக்கான உயராய்வு மையம்: கூட்டுறவு சா்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு தலைவா் தகவல்!

மஹிந்திரா நிறுவனத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்





