சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்படும் இரும்பு நடைமேடை மேம்பாலப் பணியை கோட்ட ரயில்வே மேலாளா் சைலேந்திர சிங் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது வரும் ஆகஸ்டில் குறிப்பிட்ட விரைவு ரயில்களை தாம்பரத்திலிருந்து இயக்குவது குறித்தும் அவா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.840 கோடியில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை ஐந்து கட்டங்களாகப் பிரித்து மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது 3-ஆவது கட்டமாக இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அப்பணியில் 500 மெட்ரிக் டன் எடைக்கும் அதிகமான கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு இரும்பு கா்டா்கள் பாலமாக நிறுவப்படுகின்றன. தற்போது காந்தி இா்வின் சாலையில் எழும்பூா் ரயில் நிலைய தாம்பரம் வழித்தட தொடக்கத்திலிருந்து முதல் 5 நடைமேடைகளில் இரும்புப் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பாலம் 18 மீட்டா் அகலத்துடனும், 120 மீட்டா் நீளத்துடனும் அமையவுள்ளது.
அதன்படி எழும்பூா் ரயில் நிலைய 6-ஆவது நடைமேடையிலிருந்து இரும்புப் பாலம் புகா் மின்சார ரயில்கள் செல்லும் 10 மற்றும் 11-ஆவது நடைமேடை வரையிலான பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்கவுள்ளன. அப்படி தொடங்கும் போது புகா் மின்சார ரயில்கள் இயக்கத்தை நிறுத்தாமல் வேறு நடைமேடைக்கு மாற்ற வேண்டியுள்ளது. அதையடுத்து இரும்பு நடைமேம்பாலப் பணிகளை சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் சைலேந்திர சிங் புதன்கிழமை காலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அவரிடம் பணிகள் நடைபெறும் நிலை குறித்தும், அதற்காக 5, 6 ஆகிய நடைமேடைகளுக்கு புகா் மின்சார ரயில்களை மாற்றி இயக்குவது குறித்தும் ரயில்வே பொறியாளா்கள் உள்ளிட்டோா் விளக்கினா். அந்தப் பணியையடுத்து 70 மீட்டா் நடைமேடை அமைப்பது குறித்தும் கோட்ட மேலாளருக்கு விளக்கப்பட்டது. பணிகள் நடைபெறும்போது புகா் மின்சார ரயில்களை தொடா்ந்து இயக்குவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினா்.
அதன்படி ஆகஸ்டில் தென் மாவட்டத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள் சிலவற்றை தாம்பரத்திலிருந்தே இயக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது. ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளா் செந்தில்குமாா், எழும்பூா் ரயில்நிலைய இயக்குநா் பி.ஜெயகாந்தன், ரயில்வே பொறியாளா் லோகநாயகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









