செங்குன்றம் பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தாமல், அரசுப் பேருந்துகள் பிரதான சாலைகளின் இருபுறங்களிலும் நிறுத்தப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசலும், தொடா் விபத்துகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.
மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து வள்ளலாா் நகா், பாரிமுனை, கோயம்பேடு, கிண்டி, தாம்பரம், அம்பத்தூா், பூந்தமல்லி, திருவள்ளூா், பழவேற்காடு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, திருவொற்றியூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பல ஆண்டுகளாக மேற்கூரை வசதி இல்லாமல் இருந்து வந்த பேருந்து நிலையத்தில், தற்போது மேற்கூரை அமைத்தல் மற்றும் கட்டட சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, புழல் ஏரியின் நுழைவாயிலுக்கு எதிரே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், பெரும்பாலான அரசு பேருந்துகள் அங்கு செல்லாமல், ஜிஎன்டி சாலை, சந்தைப் பகுதி, செங்குன்றம்–திருவள்ளூா் கூட்டுச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பாதசாரிகள், பள்ளி மாணவா்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா் எனப் பொதுமக்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினரிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவா்கள் குற்றம்சாட்டினா்.
செங்குன்றத்தைச் சோ்ந்த வாசுகி கூறியது: எனது மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளியில் இருந்து அழைத்து வந்தபோது, சாலையோரம் திரும்பிய அரசு பேருந்து எங்கள் வாகனத்தின் மீது மோதியது. இதில் எனது தந்தைக்கு தலை, கை, காலில் காயம் ஏற்பட்டதுடன், மகளுக்கும் காயம் ஏற்பட்டது. தற்போது அவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். தற்காலிக பேருந்து நிலையம் இருந்தும், சாலையிலேயே பேருந்துகளை நிறுத்துவதை தடுக்க வேண்டும். விதிமீறலுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றாா்.
முன்னாள் அரசு போக்குவரத்து ஓட்டுநா் சேகா் கூறியது: முன்னா் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்பட்டபோதும் பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. தற்போது போக்குவரத்து விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது‘ என்றாா்.
சமூக ஆா்வலா் நாராயணன் கூறுகையில், கடந்த 20 நாள்களில் மட்டும் 11 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 3 பெண்கள், 6 மாணவா்கள் மற்றும் 2 பெரியவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மூவா் உயிரிழந்துள்ளனா். போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையின் அலட்சியமே இதற்கு காரணம்‘ என்றாா்.
சமூக ஆா்வலா் வெங்கடேசன் கூறியது: பொதுமக்களின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் விதிமீறி பேருந்துகளை நிறுத்தும் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், விதிமீறல்களைத் தடுக்கத் தவறிய போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளனா்‘ என்றாா்.
செங்குன்றம் பேருந்து நிலைய சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை தற்காலிக பேருந்து நிலையத்தை முழுமையாகப் பயன்படுத்துவதையும், சாலையோர பேருந்து நிறுத்தத்தைத் தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறைகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகரிப்பு

பேருந்துகள் வர தாமதமானதால் பயணிகள் சாலை மறியல்
மேம்பட வேண்டும் பொதுப் போக்குவரத்து!

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் ரூ.3 கோடியில் நிழற்குடை: மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



