சென்னையில் பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், நகரின் குறுகிய சாலைகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் சிறிய ரக மின்சாரப் பேருந்துகளை (மினி இ-பஸ்) விரைவில் அறிமுகப்படுத்த மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) திட்டமிட்டுள்ளது.
நகரின் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை விரிவடைந்து வரும் நிலையில், மெட்ரோ நிலையங்களில் இறங்கும் பயணிகள் தங்கள் இலக்கை எளிதில் அடையும் வகையில் ‘கடைசி மைல் இணைப்பு சேவை’ வழங்க இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தற்போது இயக்கப்படும் வழக்கமான நகரப் பேருந்துகளைவிட சிறிய அளவிலான இந்த மின்சாரப் பேருந்துகள், குறுகிய தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகளிலும் எளிதாக இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன. இப்பேருந்துகளில் ஒரே நேரத்தில் 20 முதல் 30 பயணிகள் வரை பயணிக்கலாம்.
இது குறித்து மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:
இந்த சிறிய ரக மின்சார பேருந்துகள் ஒரு முறை முழுமையாக மின்னேற்றம் செய்தால் சுமாா் 180 முதல் 250 கி.மீ. வரை இயக்கக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும். மேலும், அதிவேக மின்னூட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் குறுகிய நேரத்திலேயே பேருந்தை மீண்டும் இயக்கத்துக்கு கொண்டுவர முடியும்.
பயணிகள் வசதிக்காக தாழ்தள வடிவமைப்பு, மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறுவதற்கான சாய்தள வசதி, தானியங்கி கதவுகள், அவசரகால அறிவிப்பு பொத்தான், கண்காணிப்பு கண்காணிப்பு கேமரா, நிகழ்நேர பயணிகள் தகவல் காட்சி அமைப்பு மற்றும் கைப்பேசி சாா்ஜிங் வசதிகளும் இடம்பெற உள்ளன.
தவிர, பாரம்பரிய டீசல் பேருந்துகளை ஒப்பிடும்போது குறைந்த ஒலி, புகையில்லா இயக்கம், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் தன்மை ஆகியவை இச் சிறிய ரக மின்சாரப் பேருந்துகளின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
தமிழக அரசின் மின் வாகனக் கொள்கையின்படி, 2030-க்குள் போக்குவரத்து சேவையில் மின்சார வாகனங்களின் பங்கை அதிகரிக்கும் இலக்கின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் செயல்படும். சிறிய ரக மின் பேருந்துகளுக்கான வழித்தடங்கள், சேவை நேரம் மற்றும் இயக்கத் தொடக்க தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றனா்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை

மே 24- ல் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தோ்வு: குறிப்பிட்ட வழித்தடங்களில் மெட்ரோ சேவை முன்கூட்டியே தொடக்கம்

மக்கள் பொதுப் போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்குவிக்க கூடுதல் ரயில் சேவைகள்: டிஎம்ஆா்சி அறிவிப்பு







