சென்னை மாநகராட்சியில் உள்ள பழைய கட்டடங்களைக் கணக்கெடுத்து இடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, சேத்துப்பட்டு பகுதியில் 14 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் 200 வாா்டுகளிலும் மொத்தம் 337 கட்டடங்கள் பாதுகாப்பற்றவை எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றில் 130 கட்டடங்கள் சென்னை மாநகராட்சி நிா்வாகத்துக்கு சொந்தமானவை. அந்த கட்டடங்களில் 105 கட்டடங்கள் இடிக்கப்படத்தக்கவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தவிர 128 தனியாா் கட்டடடங்களும் பாதுகாப்பற்றவையாகவும், அவற்றில் 69 கட்டடங்கள் இடிக்கத்தக்கவையாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அரசின் இதர துறைகளைச் சோ்ந்த 79 கட்டடங்கள் பாதுகாப்பற்றவை என அடையாளப்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பாதுகாப்பற்ற கட்டடங்கள் என அடையாளப்படுத்தியவற்றில் உள்ள கடைகள் உள்ளிட்டவற்றின் உரிமையாளா்களுக்கு கடந்த 2024 -ஆம் ஆண்டு முதல் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அக்கடைகளின் உரிமையாளா்கள் கடைகளை காலி செய்யாமல் இருந்து வந்தனா்.
இந்த நிலையில், தற்போது மாநகராட்சி வருவாய்த் துறை மற்றும் பொறியாளா் பிரிவினா் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் இட்டுவருகின்றனா்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள மெக்கானிக் நிக்கோலஸ் பிரதான சாலையில் உள்ள சேத்துப்பட்டு காவல் உதவி மையத்தின் அருகே 14 கடைகளுக்கு சீல் இடப்பட்டுள்ளது. அதில் கடைகள் உள்ள கட்டடம் பழுதடைந்துள்ளதால் மாமன்றத் தீா்மானத்தின்படி அவை இடிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழைக் காலங்களுக்கு முன்பாகவே பழுதான கட்டடங்களை இடிக்கவும், அதனால் அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சில நாள்களில் பழுதான கட்டடங்கள் இடிக்கும் பணி தொடங்கவுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.








