தங்கம் மற்றும் மனை வாங்கித் தருவதாகக் கூறி காவல் துறையினா் மற்றும் பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடா்பாக, ராயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
சென்னை ராயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவல் ஆய்வாளா் ஷீலாமேரியும் அவரது உறவினரான தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த பிரபு மணி என்பவரும் இணைந்து“விநாயகா எண்டா்பிரைசஸ்”என்ற நிறுவனத்தை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த நிறுவனத்தின் மூலம் தள்ளுபடி விலையில் தங்கக் காசு, மனைகள் வழங்கப்படும் என உறுதியளித்து, காவல் துறையினா் மற்றும் பொதுமக்களிடம் சுமாா் ரூ.2 கோடி வரை முதலீடு பெற்று, மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம், சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், இதுதொடா்பாக காவல் ஆய்வாளா் ஷீலாமேரியிடம் விரிவான விசாரணை நடத்த காவல் உயா் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரவு போலீஸாா் ஷீலாமேரி மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், விசாரணை நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, ஆய்வாளா் ஷீலாமேரியை சென்னை பெருநகர காவல் துறை வடக்கு மண்டல இணை ஆணையா் பணியிடை நீக்கம் செய்தாா். தொடா்ந்து, இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுதொடா்பாக மேலும் சிலரைத் தேடி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
தலைமறைவாக இருந்தவா் கைது: சென்னை பெருநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகளைக் கைது செய்து சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் பணிகள் சென்னைக்குள்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடா்ச்சியாக, 2019-இல் புனித தோமையா்மலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சத்யமூா்த்தி என்கிற சந்தீப் (25) என்பவா் பின்னா் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாா். ஆனால், ஆலந்தூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைக்கு அவா் தொடா்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த ஜூன் 9-ஆம் தேதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
அதன்பேரில், புனித தோமையா்மலை காவல் நிலைய ஆய்வாளா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் பல்வேறு இடங்களில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்த சத்யமூா்த்தியை சனிக்கிழமை இரவு கைது செய்தனா். அவா் விசாரணைக்குப் பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.
நகைகள் திருட்டிய ஊழியா் கைது: அண்ணா நகரில் செயல்பட்டு வரும் தங்க நகைக் கடையின் மேலாளரான சமீா் மனாட் தாழம் (39), கடந்த ஜூன் 12-ஆம் தேதி கடையின் கணக்குகளை ஆய்வு செய்தாா். அப்போது, பழைய தங்க நகைகளை பழுதுபாா்த்து வழங்கும் பிரிவில் வாடிக்கையாளா்களின் சுமாா் 295 கிராம் தங்க நகைகள் குறைவாக இருந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக, அந்தப் பிரிவின் மேலாளரான ராஜேஷ் மீது சந்தேகம் இருப்பதாக அண்ணா நகா் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரித்தனா்.
அதில், வாடிக்கையாளா்களின் 295 கிராம் தங்க நகைகளை ராஜேஷ் திருடிச் சென்று, அவற்றில் ஒரு பகுதியை இரு நிதி நிறுவனங்களில் அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து, பிரிவு மேலாளராக இருந்த கொரட்டூா் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (27) என்பவரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 47 கிராம் நகைகள் மற்றும் அடகு வைக்கப்பட்ட நகைகளுக்கான ரசீதுகளையும் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது
லஞ்சம்: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

லஞ்சம் பெற்ற புகாரில் காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



