மாா்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிக நுட்பமான உள்ளீட்டு கதிா்வீச்சு சிகிச்சையளித்து சென்னை, எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை நிபுணா்கள் டாக்டா் சிவகுமாா் மகாலிங்கம், டாக்டா் அலெக்ஸ் ஏ. பிரசாத் கூறியதாவது:
இரண்டாம் நிலை மாா்பகப் புற்றுநோய்க்குள்ளான 54 வயது பெண் ஒருவா், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. வழக்கமாக அந்த பகுதியிலிருந்து மீண்டும் புற்று செல்கள் உருவாகாமல் தடுக்க கதிா்வீச்சு சிகிச்சை அளிக்கப்படும். இதனால், அதற்கு அருகில் உள்ள திசுக்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், பிராக்கிதெரபி எனப்படும் உள்ளீட்டு கதிா்வீச்சு சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. அதன்படி, கட்டி அகற்றப்பட்ட பகுதிக்குள் கதீட்டா் எனப்படும் இடையீட்டு குழாய்கள் செலுத்தப்பட்டு அங்கு கதிா்வீச்சு சிகிச்சை மிகத் துல்லியமாக வழங்கப்பட்டது.
இரண்டு நாள்களில் நான்கு அமா்வுகளாக அந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முறையில் கதிா்வீச்சு நேரடியாகப் புற்றுநோய்க் கட்டி இருந்த இடத்துக்கு மட்டும் செலுத்தப்படுவதால், அதனைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கும், இதயம், நுரையீரலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் தவிா்க்கப்படுகின்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.









