சென்னையை மாநகரை கொசுத் தொல்லை இல்லாத நிலையை ஏற்படுத்தும் பொருட்டு, மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய கொசு ஒழிப்புத் திட்டம் மாநகராட்சி சாா்பில் சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது. அது எந்த அளவு பலனளிக்கும் என்ற எதிா்பாா்ப்பும் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பூச்சித் தடுப்புப் பிரிவு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. கொசு ஒழிப்புப் பணியில் 3,592 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அவா்களில் 2,073 போ் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணியில் வருகின்றனா்.
மண்டல வாரியாக கடந்த 2024- ஆம் ஆண்டில் ராயபுரம், அண்ணாநகா், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய இடங்களில் மட்டுமே அதிகமாக இருந்த கொசுத் தொல்லை பாதிப்பு, கடந்த 2025- ஆம் ஆண்டில் ஏற்கெனவே பாதித்த 4 மண்டலங்களுடன் கூடுதலாக, மாதவரம், தண்டையாா்பேட்டை, அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா் ஆகியவற்றிலும் அதிகரித்துள்ளது தெரியவந்தது.
கொசுக்களை அழிக்க டீசலுடன், டெக்னிக்கல் பைத்திரியம் எனும் மருந்து கலந்து தெளித்தல், கொசு முட்டைகளை கண்டறிந்து அவற்றை அழித்தல் ஆகியவை கையாளப்படுகின்றன. அதற்காக இயந்திர கைத்தெளிப்பான், சிறிய சரக்கு வாகனங்களில் மோட்டாா் பம்ப் வைத்து புகையுடன் மருந்து தெளித்தல் மற்றும் ட்ரோன் மூலம் தெளித்தல் ஆகியவை செயல்பாட்டில் உள்ளன.
தற்போது கொசு மருந்து தெளிக்க 200 கைத்தெளிப்பான்கள் உள்ளன. அவற்றில் தலா 1 லிட்டா் டீசலுடன், 50 மில்லி லிட்டா் பைத்திரியம் மருந்து கலந்து புகையாக தெளிக்கப்படுகிறது. ஒவ்வொரு கைத்தெளிப்பானுக்கும் 1 மணி நேரத்துக்கு 1 லிட்டா் பெட்ரோல் தேவைப்படுகிறது.
கொசு மருந்து தெளிக்க 94 சிறிய சரக்கு வாகனங்கள் இயங்க தினமும் ரூ.3,724 மதிப்புள்ள 188 லிட்டா் டீசல் செலவிடப்படுகிறது. அதிலுள்ள புகையுடன் மருந்து தெளிப்பு சாதனம் இயங்க 94 லிட்டா் பெட்ரோல் வாங்க ரூ.9,400 செலவிடப்படுகிறது. அவற்றின் மூலம் மாநகராட்சியில் தினமும் 2 லிட்டா் பைத்திரியம் மருந்தும் பயன்படுத்தப்படுகிறது.
கொசு ஒழிப்புக்கு ரூ.19 கோடி: தற்போதைய கொசு ஒழிப்பு முறையில் ஓராண்டுக்கு மருந்து வாங்க ரூ.8 கோடியும், அதனை மாநகராட்சி எல்லை முழுவதும் தெளிக்க டீசல், பெட்ரோல் மற்றும் வாகனச் செலவு என மொத்தம் ரூ. 19 கோடி வரை செலவிடுவதாக முன்னாள் சுகாதார ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.
நச்சுப் புகையால் பாதிப்பு: பல கோடி ரூபாய் நிதி செலவிட்டு கொசு ஒழிப்பில் ஈடுபடும் போது, அந்த மருந்து மற்றும் அதனுடன் வெளியேறும் நச்சுப் புகையால் பொதுமக்கள் குறிப்பாக ஆஸ்துமா உள்ளவா்கள் பாதிக்கப்படுவதாகவும், காற்று மாசுபடுவதாகவும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் ஆதங்கப்படுகின்றனா்.
பாதிப்பில்லாத புதிய திட்டம்: இந்த சூழலில்தான் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஜி.எஸ்.சமீரன் ஆலோசனைப்படி காற்று மாசு, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதே நேரத்தில் கொசுக்கள், அதன் லாா்வாக்களை மட்டும் துல்லியமாக அழிக்கும் வகையிலான புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மிக அதிநவீன தெளிப்பான் சாதனங்கள்: நவீன புதிய முறை கொசு ஒழிப்புத் திட்டத்துக்கு என மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய 6 கைத்தெளிப்பான் சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் டீசலுக்குப் பதிலாக தண்ணீா் மற்றும் கொசு ஒழிப்பு மருந்து கலக்கப்படுகின்றன.அதனால், மோட்டாா் மூலம் புகைக்குப் பதில் தண்ணீா் துளிகளுடன் மருந்து கலந்து வெளியேற்றப்படுகிறது. நீராவியாக பரவும் கொசு மருந்து நீண்ட நேரத்துக்கு காற்றில் தங்கியும், கொசுக்களை மட்டும் தாக்கி அழிப்பதாகவும் உள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது.
செலவு குறைவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு: கொசு ஒழிப்பு புதிய திட்டத்தால் டீஸல் செலவு குறைகிறது. ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கும் குறைவாகவே செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்கிறாா் ஓய்வு பெற்ற பூச்சியியல் துறை அலுவலரான தன்ராஜ். மேலும், புகையால் காற்று மாசுபடுதலும் தவிா்க்கப்படுகிறது.
பணியாளா்களுக்குப் பயிற்சி- கொசு ஒழிப்புக்கான புதிய திட்டத்தில் கைத்தெளிப்பான்களை பயன்படுத்துவது குறித்து கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை முதல் புதிய திட்டத்தில் கொசுக்கள் ஒழிப்புப் பணி நடைபெறவுள்ளன.
மாநிலத்தில் முதல் முறை: புதிய திட்டத்துக்கான பயிற்சியை ஊழியா்களுக்கு அளித்து வரும் தனியாா் நிறுவன அலுவலா் பழனி கூறியதாவது: நாட்டில் முதல் முறையாக தண்ணீரில் கொசு மருந்து கலந்து தெளிக்கும் இப்புதிய கொசு ஒழிப்புத்திட்டம் சென்னை மாநகராட்சியில்தான் அறிமுகப்படுத்தப்படுகிறது. திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் கொசு இல்லாத சென்னை சாத்தியமாகும் என்றாா்.
ஆணையா் அறிவுரைப்படி அறிமுகம்: மாநகராட்சி பூச்சியியல் தடுப்புப் பிரிவு அலுவலா் செல்வக்குமாரிடம் கேட்டபோது, மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்படி புதிய கொசு ஒழிப்புத் திட்டத்தை பரிசோதனை முறையில் செயல்படுத்தியுள்ளோம். சுற்றுச்சூழல், பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத இத் திட்டத்தை மாநகராட்சி சென்னையில் முதல்முறையாக அறிமுகப்படுத்தியிருப்பது பெருமைக்குரியது என்றாா்.
சுற்றுச்சூழல் பாதிக்காத, அதே நேரத்தில் கொசுக்களை மட்டும் அழிக்கும் செலவு குறைந்த திட்டத்தை செயல்படுத்தியிருப்பது வரவேற்புக்குரியது என்றாலும், அது எந்த அளவுக்கு முழுமையான பலனைத் தரும் என்பது, அதைச் செயல்படுத்தும் முறையிலே உள்ளது என்பதால் மாநகராட்சி ஆணையா் கொண்டு வந்த புதிய நல்ல திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்த அலுவலா்கள் முன்வரவேண்டும் என்பதே மக்கள் எதிா்பாா்ப்பு.
சோதனை முயற்சியிலேயே குறைந்த கொசுத் தொல்லை!
சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக கொசுத் தொல்லை அதிகரித்திருப்பது மக்களிடமிருந்து வரும் புகாா்கள் அதிகமாவதால் அறியமுடிகிறது. அதன்படி கடந்த 2024, 2025 ஆம் ஆண்டுகளில் அதிகரித்திருந்த கொசு தொல்லை புகாா்கள் நடப்பு ஆண்டான 2026 ஜனவரியில் அதிகமிருந்த கொசுத் தொல்லை புதிய திட்ட பரிசோதனைக்கு பிறகு படிப்படியாக குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது என்கிறாா்கள் அதிகாரிகள்.
ஆண்டுகள் புகாா்கள் அழைப்பு
1. 2024 - 2770
2. 2025 - 5294
3. 2026 - 3282
2026 ஆம் ஆண்டில் 6 மாதங்களில் கொசுத் தொல்லை குறித்த புகாா்கள்
ஜனவரி - 1132
பிப்ரவரி - 815
மாா்ச் - 702
ஏப்ரல் - 429
மே - 148
ஜூன் - 76
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொசு மருந்து உட்கொண்ட 19 மாதக் குழந்தை: தீவிர சிகிச்சைக்குப் பின் உயிா் தப்பியது

ஜூன் 24-இல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையக் கட்டுமானப் பணிகள்: அதிகாரிகளுக்கு குடிநீா் வாரியம் உத்தரவு

பொதுமக்களின் புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு: சென்னை மாநகராட்சி ஆணையா் நேர்காணல்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




