92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காசிமேடு மீன்பிடித் துறைமுகம்: சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படுமா?

தினமும் ரூ.1.50 கோடி முதல் ரூ. 2 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.600 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது.

News image

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம்

Updated On :23 மார்ச் 2026, 11:12 pm

தினமணி செய்திச் சேவை

முகவை சு. சிவக்குமார்

வடசென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு உள்பட்ட காசிமேடு மீன்பிடித் துறைமுகம் சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றாகவும், தென்னிந்தியாவின் மிகப்பெரிய மீன்பிடி மையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தின் வரலாறு சென்னை நகரின் வளர்ச்சியோடு பின்னிப்பிணைந்தது. நெடுங்காலமாக இப்பகுதியில் மீனவக் குடியிருப்புகள் இருந்த நிலையில், பாரம்பரிய நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் நீண்டகாலமாக இருந்தது. 1970-ஆம் ஆண்டில் இங்கு மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 1984-ஆம் ஆண்டு துறைமுகம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தது. இந்தத் துறைமுகம் சென்னைத் துறைமுகத்துக்கு முழுமையாகச் சொந்தமானது ஆகும்.

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 1,200 விசைப்படகுகள். ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் டிராலர் என அழைக்கப்படும் இழுவை படகுகள், சுமார் 2,000 பைபர் மற்றும் நாட்டுப் படகுகள் உள்ளன. இந்தத் துறைமுகத்தின் மூலம் சுமார் ஒரு லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். தினமும் ரூ.1.50 கோடி முதல் ரூ. 2 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.600 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இதில், உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகியவை அடங்கும். இங்கு பிடிக்கப்படும் மீன்களில் 40 சதவீதம் வரை ஜப்பான், சீனா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

துறைமுகத்தில் நிலவும் பிரச்னைகள்

சுற்றுச்சூழல் சீர்கேடு முக்கிய பிரச்னை பெரும்பாலான பகுதிகளில் கழிவுகள் முறையாக உடனுக்குடன் அகற்றப்படுவதில்லை. எங்கு பார்த்தாலும் மீன் கழிவுகள். குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுவது இயல்பான ஒன்றாக உள்ளது.

படகுகளை நிறுத்துவதற்குப் போதிய இடவசதி இல்லாததால், விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடையும் அபாயம் உள்ளது. படகுகளிலிருந்து இறக்கப்படும் மீன்களை விற்பனை செய்ய ஏலக் கூடங்கள் இருந்தாலும் அங்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை.

துறைமுகத்தின் தென்பகுதியில் அமைக்கப்பட்ட சில்லறை மீன் விற்பனைக் கூடம் தற்போது சேதமடைந்துள்ளது. விற்பனைக்குப் பிறகு மீதமாகும் மீன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு குளிர்சாதன வசதிகள் இல்லை. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லை. அண்மையில் சுமார் ரூ. 100 கோடியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் துறைமுகத்தின் வளர்ச்சிக்குப் போதுமானதாக இல்லை என்பது இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுமா?

இந்தத் துறைமுகத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு முதலில் தீர்வுகாண வேண்டும். குப்பை அகற்றுவதில் துறைமுக நிர்வாகம், மீனவர் நலத் துறை, மாநகராட்சி நிர்வாகம் இடையே போதிய ஒத்துழைப்பை ஏற்படுத்தினால் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும்.

இணைப்புச் சாலைகள் அனைத்தையும் முறையாக வடிவமைப்பு செய்து ஒரே நேரத்தில் செப்பனிட வேண்டும். துறைமுகத்தின் நீர்நிலையில் கொட்டப்படும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். சுற்றுச் சுவர்களை வலுப்படுத்தி பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

மொத்தம் மற்றும் சில்லறை விற்பனைக்கான மீன்களை இருப்பு வைக்க குளிரூட்டும் கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்தில் அமைக்க வேண்டும். ஏற்றுமதிக்கான மீன்களின் தரத்தை உறுதி செய்ய கடல்சார் ஏற்றுமதி வளர்ச்சி மையத்தை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் ஏற்படுத்த வேண்டும். மீன் உணவுப் பிரியர்கள் வசதிக்காக தனித்துவமான மீன் உணவகங்களை தனியார் பங்களிப்புடன் நவீன முறையில் அமைக்க வேண்டும். இதன்முலம் மீனவ மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்தி சர்வதேசத் தரத்துக்கு உயர்த்த அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் விருப்பமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.