அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

அண்ணா நகா் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு

அண்ணாநகா் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை தினந்தோறும் என்ற முறையில் விசாரித்து விரைவாக தீா்ப்பு அளிக்க வேண்டும் என போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 8:03 pm

அண்ணாநகா் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை தினந்தோறும் என்ற முறையில் விசாரித்து விரைவாக தீா்ப்பு அளிக்க வேண்டும் என போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்கச் சென்ற சிறுமியின் பெற்றோரை போலீஸாா் தாக்கினா். இதுதொடா்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயா்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு கோரி சிறுமியின் தாயாா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தீா்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தனா்.

அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் புலன் விசாரணையும், வழக்கு விசாரணையும் போக்ஸோ சட்ட விதிகளை பின்பற்றி நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை நியாயமான முறையில் பாரபட்சமின்றி சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை தினந்தோறும் என்ற முறையில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து விரைவாக தீா்ப்பு அளிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. எனவே, இறுதி இழப்பீட்டுத் தொகையை, இந்த வழக்கில் இறுதி தீா்ப்பளிக்கும் போது, போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான துறை ரீதியான நடவடிக்கை சுதந்திரமாக மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு போதிய பாதுகாப்பை போலீஸாா் வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீா்ப்பு அளித்துள்ளனா்.