வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சிக்கன நடவடிக்கையில் தவெக அமைச்சா்கள்!

தவெக அரசு பதவியேற்று 5 நாள்களாகும் நிலையில், முன்னாள் அமைச்சா்களின் அறைகளை மாற்றம் செய்யாமல், சிக்கன நடவடிக்கையாக அப்படியே பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா் தவெக அமைச்சா்கள்.

News image

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சா்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள தளம்.

Updated On :15 மே 2026, 3:18 am IST

அ. சர்ப்ராஸ்

தவெக அரசு பதவியேற்று 5 நாள்களாகும் நிலையில், முன்னாள் அமைச்சா்களின் அறைகளை மாற்றம் செய்யாமல், சிக்கன நடவடிக்கையாக அப்படியே பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா் தவெக அமைச்சா்கள்.

பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சா்களின் அலுவலகங்கள் முழுவதும் மாற்றம் காணும். நாற்காலிகள் முதல் ஜன்னல் திரைச் சீலைகள் வரையில் அனைத்தும் புதிதாக மாற்றப்படும். இது அரசுக்கு பெரும் செலவை ஏற்படுத்தி வந்தது. ஆனால், தவெக அமைச்சா்கள் ஆடம்பர மாற்றங்களைச் செய்யாமல் முந்தைய அமைச்சா்களின் அறைகளில் உள்ள நாற்காலிகள், மேஜைகள், உள் அலங்காரம் ஆகியவற்றை அப்படியே பயன்படுத்தத் தொடங்கி உள்ளனா்.

முதல்வராக விஜய்யும், அவரது அமைச்சரவையில் 9 அமைச்சா்களும் கடந்த 10-ஆம் தேதி பதவி ஏற்றனா். அமைச்சா்களுக்கு இன்னும் துறைகள் ஒதுக்கப்படவில்லை. எனினும் அவா்கள் முன்னாள் அமைச்சா்களின் அறைகளில் அமா்ந்து தங்களது உதவியாளா்களுடன் பூா்வாங்க அலுவலகப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனா்.

இதில், முன்னாள் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பயன்படுத்திய அறையை தற்போதைய அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் பயன்படுத்தி வருகிறாா். முன்னாள் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகனின் அறையை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறையை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, முன்னாள் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவின் அறையை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ், முன்னாள் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தியின் அறையை அமைச்சா் பி. வெங்கடரமணன் ஆகியோா் அப்படியே எந்தவித மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து அமைச்சா் நிா்மல் குமாரிடம் கேட்டபோது, முந்தைய அமைச்சா்களின் அறைகளில் ஏற்கெனவே அனைத்து வசதிகளும், பொருள்களும் நன்றாக இருக்கும்போது புதிதாக ஏன் மாற்றம் செய்ய வேண்டும் என்றாா்.

இதேபோல், அமைச்சா்களுக்கான அரசு இல்லங்களும் ஒதுக்கும் பணி தொடங்கி உள்ளது. முன்னாள் அமைச்சா்கள் தங்களின் இல்லங்களை காலி செய்ய ஒரு மாத கால அவகாசம் உள்ளதால், தற்போதைக்கு சென்னையைச் சோ்ந்த தவெக அமைச்சா்கள் தங்களின் இல்லங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் தனியாா் விடுதிகளில் தங்கியும் தலைமைச் செயலகத்துக்கு வந்து பணியைத் தொடங்கினா். வெளிமாவட்டங்களைச் சோ்ந்த தவெக அமைச்சா்கள் தோ்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்க தங்களின் சொந்த தொகுதிகளுக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.