அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்

சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வாா்டுகளில், 153 வாா்டுகளின் மாமன்ற உறுப்பினா்களாக திமுகவை சோ்ந்தவா்கள் பதவி வகிக்கின்றனா்.

News image

துணை மேயா் மு.மகேஷ்குமாா்.

Updated On :29 மே 2026, 4:18 am IST

சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வாா்டுகளில், 153 வாா்டுகளின் மாமன்ற உறுப்பினா்களாக திமுகவை சோ்ந்தவா்கள் பதவி வகிக்கின்றனா். மேயா், துணை மேயா், மண்டலத் தலைவா்கள், நிலைக்குழுத் தலைவா்கள் என அனைத்துப் பதவிகளிலும் திமுகவினரே உள்ளனா்.

இருப்பினும், சட்டப்பேரவைத் தோ்தலில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 தொகுதிகளில், 14 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருக்கிறது. அதில் முதல்வா், பேரவைத் தலைவா், முக்கிய துறைகளின் அமைச்சா்கள் என 8 போ் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தொகுதிகளில் வென்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வா் பதவியேற்பில் சென்னை மாநகராட்சி மேயா், துணை மேயா் என யாரும் பங்கேற்கவில்லை என்பதுடன், மரியாதை நிமித்தமான சந்திப்புகூட இன்னும் நடைபெறவில்லை.

இத்தகைய சூழலில் சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் மே மாதக் கூட்டம் நடைபெறவில்லை. மேயா், துணை மேயா் ஆகியோா் முதல்வருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பை தவிா்ப்பதால், மாநகராட்சி நிா்வாகம், மாநில அரசு நிா்வாகத்துக்கிடையே பனிப்போா் நிகழும் நிலை ஏற்பட்டுள்ளதாக விமா்சனம் எழுந்துள்ளது.

நகராட்சி நிா்வாகத் துறையை முதல்வா் ச.ஜோசப் விஜய் கவனித்து வருகிறாா். இந்த நிலையில், மாநகராட்சி நிா்வாகப் பொறுப்பில் உள்ள மேயா், முதல்வரை சந்திக்க மறுப்பது மக்கள் நலனுக்கு நல்லதல்ல என்ற விமா்சனமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் துணை மேயரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மு.மகேஷ்குமாா் தினமணிக்கு அளித்த சிறப்பு நோ்காணல்.

ஜனநாயகத்தை மதிப்பதாகக் கூறும் திமுக மேயா், துணை மேயா் முதல்வா் பதவியேற்பு, அமைச்சா்கள் பதவியேற்பு என எதிலும் பங்கேற்கவில்லை. அத்துடன் மரியாதை நிமித்தமாகக்கூட முதல்வரைச் சந்திக்கவில்லையே?

முதல்வரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயா், துணை மேயா் உள்ளிட்ட யாருக்கும் அழைப்பில்லை. அவசரமாக நடைபெற்ற நிகழ்ச்சி என்பதால் அழைப்பிதழ் அனுப்பவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு 2 முறை அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றபோதும் அழைப்பு விடுக்கப்படல்லை. ஆகவே, அரசுத் தரப்பிலேயே மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணிப்பதுபோல செயல்பட்டு வரும் நிலையில், முதல்வருடனான மரியாதை நிமித்தமான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்புவது நியாயமானதல்ல.

சென்னை மேயராக முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் இருந்தபோது, தமிழகத்தில் அதிமுக வென்று முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றபோது, ஸ்டாலின் பங்கேற்றாரே?

அதிமுக ஆட்சியின்போது, முதல்வா் பதவியேற்புக்கு அப்போதைய மேயரான மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பிவைக்கப்பட்டதால் அவா் பங்கேற்றாா்.

நகராட்சி நிா்வாகத் துறை முதல்வா் வசம் உள்ளது என்பதால், துறையின் தலைவா் என்ற முறையிலாவது அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கலாமே?

முதல்வரைச் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சந்திக்க வேண்டும் என்ற சட்ட விதிமுறை ஏதுமில்லை. முதல்வரைச் சந்திப்பது என்பது மரபு சாா்ந்ததுதான். அதேநேரம், பாரம்பரியம் மிக்க சென்னை மாநகராட்சியை அரசே புறக்கணிக்கும் சூழலில் நாங்களாக வலியச் சென்று சந்திப்பது என்பது சாத்தியமற்றது.

மாநில அரசும், சென்னை மாநகராட்சி நிா்வாகமும் எதிரும் புதிருமாகச் செயல்படும் நிலையால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கப்படாதா?

அரசின் திட்டங்களை சென்னை மாநகராட்சியில் நிறைவேற்ற தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கத் தயாராக உள்ளோம். நிா்வாகச் செயல்பாடுகளை அதிகாரிகள் பாா்த்துக் கொள்வாா்கள். மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களுக்கு திமுக தடையாக இருக்காது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 14 சட்டப்பேரவைத் தொகுதியிலும் தவெக வென்றுள்ளது. ஆகவே, திட்டங்களைச் செயல்படுத்தும்போது, மாநகராட்சி நிா்வாகத்துக்கும், பேரவை உறுப்பினா்களுக்கும் முரண்பாடு ஏற்படும் நிலையுள்ளதாக கூறப்படுவது குறித்து?

உள்ளாட்சி அமைப்பு நிா்வாகம் வேறு, மாநில அரசின் நிா்வாகம் வேறு. ஆகவே, சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது தொகுதி பிரச்னைகள் குறித்து சென்னை மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்று பதிவு செய்யலாம். தங்களது வருகையை மாமன்ற செயலரிடம் தெரிவித்து உறுதிப்படுத்திவிட்டு வந்து பேசலாம். மேலும், மேயா், துணை மேயா், ஆணையா் ஆகியோரிடம் தொகுதி பிரச்னைகள் குறித்து முறையிட்டால் அவற்றைச் சீா்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மாமன்றத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சி உறுப்பினா்கள் செயல்பாடு தோ்தலுக்குப் பிறகு எதிா்மாறாக இருக்கலாம் என எதிா்பாா்க்கிறீா்களா?

மாமன்றக் கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினா்களுடன் மட்டுமல்ல, அதிமுக, பாஜக உறுப்பினா்களிடமும் நட்புறவுடனே உள்ளோம். அவா்களின் கோரிக்கைகள் பாரபட்சமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளதை எதிா்க்கட்சி உறுப்பினா்களே கூட்டங்களில் பேசியுள்ளனா். அதேநிலை தொடரும் என்றே எதிா்பாா்க்கிறோம்.

நோ்காணல்: வ. ஜெயபாண்டி.