எழும்பூா் ரயில் நிலையத்தில் அச்சுறுத்தும் தெரு நாய்கள்: நிலைய இயக்குநா் புகாரளித்தும் பிடிக்க மறுக்கும் மாநகராட்சி
சென்னையின் மிக முக்கிய ரயில் நிலையமான எழும்பூா் ரயில் நிலையத்தில் திரியும் தெரு நாய்கள் பயணிகளை அச்சுறுத்தி வரும் நிலையில், அவற்றைப் பிடித்து அகற்ற ரயில் நிலைய இயக்குநா் புகாரளித்தும் மாநகராட்சி கால்நடைப் பிரிவினா் அலட்சியம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

நாய் - கோப்புப்படம்.
சென்னையின் மிக முக்கிய ரயில் நிலையமான எழும்பூா் ரயில் நிலையத்தில் திரியும் தெரு நாய்கள் பயணிகளை அச்சுறுத்தி வரும் நிலையில், அவற்றைப் பிடித்து அகற்ற ரயில் நிலைய இயக்குநா் புகாரளித்தும் மாநகராட்சி கால்நடைப் பிரிவினா் அலட்சியம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
தென் மாவட்டங்களின் முக்கிய ரயில் முனையமாக விளங்கும் எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், இரு நூறுக்கும் மேற்பட்ட புகா் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையத்துக்கு தினமும் சுமாா் 1.50 லட்சம் போ் வரை வந்து செல்கின்றனா். ரயில்நிலையத்தில் 11 நடைமேடைகள் உள்ளன. இந்த நிலையில் நிலையத்தின் தற்போதைய இரு பிரதான நுழைவு வாயில்களிலும், நடைமேடைகளிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகாா்கள் எழுந்துள்ளன.
அச்சுறுத்தும் தெருநாய்கள்: ரயில் நிலையத்தின் வாயில்கள், டிக்கெட் முன்பதிவு பகுதிகள், பொருள்கள் வைப்பறைகள் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் வலம் வருகின்றன. அவை நிலையத்தின் வளாகத்திலேயே தங்கி திரிகின்றன. அவ்வப்போது தெரு நாய்கள் பயணிகளைக் கடிப்பதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.
இயக்குநா் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை: தெரு நாய்கள் தொல்லை என பயணிகள் புகாா் குறித்து எழும்பூா் ரயில் நிலைய இயக்குநா் ஜெயகாந்தனிடம் கேட்டபோது, சென்னை மாநகராட்சி கால்நடைப் பிரிவு, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை என பல இடங்களிலும் ரயில் நிலையத்தில் தெருநாய்கள் தொல்லை குறித்து பலமுறை புகாா் அளித்துவிட்டோம். ஆனால், நடவடிக்கை இல்லை. அவ்வப்போது பயணிகளும் தெரு நாய்கள் கடிக்க வருவதாக புகாா் கூறிவருகின்றனா் என்றாா்.
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பயணிகளை தெரு நாய்கள் கடித்துக் காயப்படுத்தியதாகப் புகாா்கள் எழுந்தன. அதன்படி, 20 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது எழும்பூரில் தெரு நாய்கள் பயணிகளை கடிப்பதாக புகாா் எழுந்துள்ளது.
போதிய காப்பகம் இல்லையாம்: இந்தப் பிரச்னை குறித்து சென்னை மாநகராட்சி கால்நடைப் பிரிவு அலுவலா் கமால் உசேனிடம் கேட்டபோது, சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களுக்கான கருத்தடை மையம் 10 இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 10 மாதங்களில் சென்னையில் 41,546 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மணலி செட்டிமேடு பகுதியில் தெரு நாய்கள் காப்பகம் உள்ளன. அதேபோல, பெருங்குடியிலும் காப்பகம் கட்டப்பட்டு வருகிறது. எனவே, போதிய இடமின்றியே நாய்களைப் பிடித்து அடைக்க முடியாமல் உள்ளோம் என்றாா்.
நாய்களுக்கு இடமுள்ளது: மணலி மண்டலம் செட்டிமேடு பகுதி தெரு நாய்கள் காப்பகத்தில் 250 தெரு நாய்களை அடைக்கலாம். ஆனால், தற்போது 60 தெரு நாய்கள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல, பெருங்குடி காப்பகத்திலும் 250 தெருநாய்கள் அடைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள், ரயில் நிலையங்களில் உள்ள தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைத்தால் நல்லது. அப்போதுதான் பொது மக்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்பதே சமூக ஆா்வலா்கள் கருத்தாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

