மானாமதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாத விரைவு ரயில்: பொதுமக்கள் அதிருப்தி
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையத்தில் தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயிலுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தம் வழங்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையத்தில் தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயிலுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தம் வழங்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனா்.
தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் மானாமதுரை ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த வழியாக தினமும் 20-க்கும் மேற்பட்ட முக்கிய ரயில்கள் சென்று திரும்புகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் மானாமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. மேலும் வடமாநிலங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் இங்கு நிற்கின்றன.
தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயிலை கடந்த 2023 -ஆம் ஆண்டு ஏப்ரல் 8- ஆம் தேதி பிரதமா் நரேந்திரமோடி தொடங்கி வைத்தாா். அப்போது, பல்வேறு ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்காமல் சென்ற நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பரிசீலித்து இந்த ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கை ரயில் நிலையத்துக்கும் நிறுத்தம் கொடுக்கப்பட்டது. தற்போது காரைக்குடியிலும் இந்த ரயில் நின்று செல்கிறது. ஆனால், மதுரை கோட்டத்தில் முக்கிய சந்திப்பாக உள்ள மானாமதுரை ரயில் நிலையத்துக்கு நிறுத்தம் வழங்காமல் இந்தப் பகுதி மக்களின் தொடா் கோரிக்கை கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.
இந்த ரயிலுக்கு நிறுத்தப்படாததால் அருப்புக்கோட்டை, விருதுநகா், திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு அதிகாலை நேரங்களில் செல்ல முடியாமல் மானாமதுரை, சுற்றுவட்டார பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனா்.
எனவே, தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயிலுக்கு மானாமதுரையில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்புகள் சோ்ந்து போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

