பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!இந்தியா - போலந்து உறவை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை முயற்சிகள்: பிரதமர் மோடிஅடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர மாட்டீர்கள் ராகுல்! அமித் ஷா கடும் விமர்சனம்தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா? கனிமொழி கேள்வி!பருவமழை தீவிரம்: சென்னை எழிலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!

மதுரை–குருவாயூர் விரைவு ரயிலில் விஸ்டாடோம் பெட்டி அறிமுகம்! மேற்குத் தொடர்ச்சி மலையழகை ரசிக்க!!

மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் விஸ்டாடோம் பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பற்றி..

விஸ்டாடோம் பெட்டி அறிமுகம்

விஸ்டாடோம் பெட்டி அறிமுகம் - Video grab

Updated On :

மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசித்தபடி பயணிக்கும் வகையில் மதுரை–குருவாயூர் விரைவு ரயிலில் விஸ்டாடோம் பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் பெட்டி, அக்டோபர் 22 முதல் ஜனவரி 2027 வரை சோதனை அடிப்படையில் இயக்கப்படவிருக்கிறது. இந்த பெட்டியில் 42 பேர் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் முதல் முறையாக, அகண்ட கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கண்ணாடி மேற்கூரையுடன் கூடிய விஸ்டாடோம் (Vistadome) பெட்டியை மதுரை–குருவாயூர்–மதுரை விரைவு ரயிலில் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள், ஆன்மிகப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசித்தபடி பயணம் செய்வதற்காக, இந்த வசதி தற்காலிகச் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் (அக்டோபர் 22) முதல் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து கேரள மாநிலம் குருவாயூருக்குச் செல்லும் 16327 எண் கொண்ட விரைவு ரயிலில், 2026 அக்டோபர் 22 முதல் 2027 ஜனவரி 15 வரை விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்படுவதால், இதில் பயணிக்க மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

குருவாயூரிலிருந்து மதுரைக்குப் புறப்படும் 16328 எண் கொண்ட விரைவு ரயிலில், அக்டோபர் 23 முதல் 2027 ஜனவரி 16 வரை விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்படும். இந்த ரயில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் இயக்கப்படும்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அழகைக் காணலாம்!

இந்த ரயில் பயணத்தின் முக்கிய சிறப்பம்சமாக, செங்கோட்டை–புனலூர் மலைப்பாதை அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் வழியாகச் செல்லும் இந்தப் பாதையில் உயரமான மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடுகள், சுரங்கப்பாதைகள் மற்றும் அருவிகளைக் கண்டு ரசிக்கலாம்.

குறிப்பாக, மழைக்காலத்தில் இந்தப் பகுதியின் இயற்கை எழில். பயணிகளைக் கவரும் வகையில் இருக்கும்.

கேரள மாநிலத்தில் உள்ள பாலருவி மற்றும் கழுதுருட்டி அருவிகள், தென்மலை சுற்றுச்சூழல் சுற்றுலா மையம், தென்காசி அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற குற்றாலம் அருவிகள் ஆகியவை இந்த ரயில் பாதை வழியாகப் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய ஈர்ப்புகளாக உள்ளன.

Story image

மேலும், 13 வளைவுப் பாலம் என்று அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பதிமூன்னு கண்ணாரப் பாலம் (Pathimoonu Kannara Bridge) உள்ளிட்ட பல பாலங்களும் சுரங்கப்பாதைகளும் இந்த ரயில் பாதையின் பொறியியல் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன.

42 பேர் பயணிக்கலாம்!

விஸ்டாடோம் பெட்டியில் நிர்வாக வகுப்பு இருக்கை வசதியுடன் (Executive Chair Car) மொத்தம் 42 பேர் பயணிக்கலாம்.

அகண்ட கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் மின்சார இயக்கத்துடன் கூடிய கண்ணாடி மேற்கூரை ஆகியவை இந்தப் பெட்டியின் முக்கிய சிறப்பம்சங்களாகும். மேற்கூரைக் கண்ணாடியைத் தேவைக்கேற்ப வெளிப்படையான மற்றும் ஒளியைப் பரவலாகச் செலுத்தும் வகைகளுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

இதன் மூலம் பயணிகள் சுற்றியுள்ள மலைகள், காடுகள் மற்றும் இயற்கைக் காட்சிகளைப் பரந்த கோணத்தில் ரசிக்கலாம்.

மேலும், சுழற்றக்கூடிய இருக்கைகள், பின்னால் சாய்த்துக்கொள்ளக்கூடிய இருக்கைகள் மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் இடம்பெற்றுள்ளன. கழிப்பறைகளில் செராமிக் ஓடுகளால் அமைக்கப்பட்ட தரைத்தளமும், வெளியில் அதிகம் தெரியாத வகையில் பொருத்தப்பட்ட நவீன உபகரணங்களும் உள்ளன.

தமிழகம்–கேரளத்தை இணைக்கும் முக்கிய வழித்தடம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் ஆகிய இரண்டு முக்கிய ஆன்மிகத் தலங்களை இந்த ரயில் இணைக்கிறது.

இதுதவிர, தமிழகம் மற்றும் கேரளத்தின் முக்கிய வணிக, தொழில் மற்றும் சுற்றுலா நகரங்களுக்கும் இந்த ரயில் சேவை பயனளிக்கிறது.

விருதுநகர் வர்த்தக நடவடிக்கைகளுக்கும், சிவகாசி பட்டாசு மற்றும் அச்சுத் தொழில்களுக்கும், ராஜபாளையம் ஜவுளி மற்றும் தொழில் நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்றுள்ளன. தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் நுழைவாயிலாக விளங்குகிறது. செங்கோட்டை மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் நிறைந்த பகுதிகளுக்குச் செல்ல உதவுகிறது.

கேரளத்தில் புனலூர், கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுன் மற்றும் திருச்சூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் இந்தச் சேவையின் மூலம் இணைக்கப்படுகின்றன.

எர்ணாகுளம்–கொச்சி தென்னிந்தியாவின் முக்கிய வணிக மையமாகவும், கோட்டயம் வர்த்தகம் மற்றும் பதிப்புத் தொழில்களுக்கும், உப்பங்கழிப் பகுதிகளுக்கு அருகாமையாலும் சிறப்புப் பெற்றதாகவும் விளங்குகின்றன.

இரு மாநிலங்களிலும் உள்ள பல நகரங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கிடையிலான போக்குவரத்து இணைப்பை இந்த ரயில் சேவை மேம்படுத்துகிறது.

விஸ்டாடோம் கட்டணம்!

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள கட்டண அட்டவணையின்படி, விஸ்டாடோம் பெட்டியில் மதுரையிலிருந்து செல்லும் முக்கிய இடங்களுக்கான கட்டணங்கள்:

மதுரை – புனலூர்: ரூ.1,010

மதுரை – கொல்லம்: ரூ.1,140

மதுரை – எர்ணாகுளம் டவுன்: ரூ.1,570

மதுரை – குருவாயூர்: ரூ.1,875

இவை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள். பயணத் தேதிக்கான கட்டணம், முன்பதிவு நிலை மற்றும் பிற பொருந்தக்கூடிய கட்டணங்களை முன்பதிவு செய்யும் நேரத்தில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ரயில் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சி

ரயில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவது, ரயில் சுற்றுலாவை ஊக்குவிப்பது மற்றும் ரயில் பாதைகளின் இயற்கை அழகு, பொறியியல் சிறப்புகளை வெளிப்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன் விஸ்டாடோம் பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மதுரை–குருவாயூர் வழித்தடத்தில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம், பயண இலக்கை அடைவது மட்டுமின்றி, பயணத்தின்போதே இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் புதிய அனுபவமும் பயணிகளுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.