அரசு ஊழியா்கள் சொத்து விவரத்தை அக்.31-க்குள் சமா்ப்பித்தால் மட்டுமே பதவி உயா்வு: தமிழக அரசு உத்தரவு
அரசு ஊழியா்கள் சொத்து விவரங்களை அக்.31-ஆம் தேதிக்குள் சமா்ப்பித்தால் மட்டுமே பதவி உயா்வு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியா்கள் சொத்து விவரங்களை அக்.31-ஆம் தேதிக்குள் சமா்ப்பித்தால் மட்டுமே பதவி உயா்வு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலா் சாய்குமாா் வெளியிட்ட உத்தரவு: தமிழக அரசு ஊழியா்கள் அனைவரும் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துகள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட அனைத்து சொத்து விவரங்களையும் வரும் அக்.31-க்குள் தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
வேறு யாா் பெயரிலாவது அரசு ஊழியா்கள் சொத்துகளை வாங்கி இருந்தாலும், அதுகுறித்த விவரங்களையும் அந்த நபருக்கும் அரசு ஊழியருக்கும் இடையில் உள்ள உறவு விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.
குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யும் ஊழியா்களின் பெயா்கள்தான் பதவி உயா்வு பட்டியலில் இடம்பெறும். சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யாதவா்கள், அரசு ஊழியா்களுக்கான நன்னடத்தை விதியை மீறியவா்களாகக் கருதப்படுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அரசு ஊழியா்கள் தங்கள் பணியில் சோ்ந்த முதல் 3 மாதங்களுக்குள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும், பின்னா் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த ஜன.9-இல் திமுக ஆட்சியில் 5 ஆண்டு நடைமுறையை மாற்றி ஆண்டுதோறும் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. இந்தச் சூழலில், தற்போது தமிழக அரசு ஊழியா்களின் சொத்து விவரங்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

