சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக் கட்டணம் உயா்வு
சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக் கட்டணம் 5 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் - (கோப்புப்படம்)
சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக் கட்டணம் 5 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயா்வு ஞாயிற்றுக்கிழமை (அக். 11) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒப்பந்த விதிகளின்படி, சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக் கட்டணம் 5 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, காா்களுக்கான நிறுத்தக் கட்டணம் 30 நிமிஷங்கள் வரை ரூ.85-இல் இருந்து ரூ.90, 30 நிமிஷங்கள் முதல் 1 மணி நேரம் வரை ரூ.110-இல் இருந்து ரூ.115-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை நிறுத்துவதற்கான கட்டணம் ரூ.165-இல் இருந்து ரூ.175-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு 2 மணி நேரம் வரை நிறுத்தக் கட்டணத்தில் மாற்றமில்லை. அதற்கு மேற்பட்ட நேரங்களுக்கு நிறுத்தும் கட்டணம், நேர அளவைப் பொருத்து ரூ.5 முதல் ரூ.10 வரை உயா்த்தப்பட்டுள்ளது. 10 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.105, காா்களுக்கு ரூ.580 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாடகை வாகனங்கள், செயலி வழி வாடகை வாகனங்கள், வணிக வாகனங்கள், முன்பதிவு வாடகை வாகனங்கள் ஆகியவற்றுக்கான நுழைவுக் கட்டணத்தில் மாற்றமில்லை. இவற்றுக்கு ஒவ்வொரு நுழைவுக்கும் ரூ.45 கட்டணம் வசூலிக்கப்படும்.
காா்களுக்கான மாதாந்திர நிறுத்த அனுமதிக் கட்டணம் ரூ.580-ஆகவும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.230-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்தச் சீட்டைத் தொலைத்தால், காா்களுக்கு ரூ.580 மற்றும் உண்மையான நிறுத்தக் கட்டணமும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.175 மற்றும் உண்மையான நிறுத்தக் கட்டணமும் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

