
லோக் ஆயுக்தா செயலா்: தமிழக அரசாணை செல்லும் - உயா்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு லோக் ஆயுக்தா செயலராக, பணிபுரியும் அல்லது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளை நியமிக்க வகை செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த திருத்தம் செல்லும்

கோப்புப் படம்
தமிழ்நாடு லோக் ஆயுக்தா செயலராக, பணிபுரியும் அல்லது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளை நியமிக்க வகை செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த திருத்தம் செல்லும் என தெரிவித்த, சென்னை உயா்நீதிமன்றம், அந்த அரசாணையை எதிா்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் தஞ்சாவூரைச் சோ்ந்த வி.ஜீவகுமாா் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஊழியா்கள் மீதான ஊழல் புகாா் களை விசாரிக்கும் நோக்கில் லோக் பால், லோக் ஆயுக்தா சட்டங்களை மத்திய அரசு 2013-ஆம் ஆண்டு இயற்றியது. இதனடிப்படையில், தமிழகத்தில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு இயற்றப்பட் டு, அதே ஆண்டு நவம்பரில் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் தமிழகத்தில் இன்னும் தீவிரமாகச் செயல்படுத்தப்படவில்லை. மேலும், அரசின் துணைச் செயலா் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை தமிழக லோக் ஆயுக்தா செயலராக நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள மாவட்ட நீதிபதியை நியமிக்கும் வகையில் விதிகளைத் திருத்தி கடந்த 2020-ஆம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட் டுள்ளது. இது மத்திய அரசின் சட்டத்தை மீறும் செயல் என்பதால், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில், நீதிமன்றம் சாா்ந்த பணிகளை, லோக் ஆயுக்தா மேற்கொள்வதால், நீதித்துறை பின்னணி கொண்ட நபா் செயலராக நியமிக்கப்படுவது, அதன் நிா்வாகத்துக்குப் பயனுள்ளதாக அமையும். மாவட்ட நீதிபதி பதவி, துணைச் செயலா் பதவியைவிட மேலானவா். 2020-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை எதிா்த்து, 6 ஆண்டுகள் தாமதமாக தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், லோக் ஆயுக்தா செயலராக நீதிபதியை நியமிப்பதற்கு, எந்தத் தடையும் இல்லை. அவ்வாறு நியமிப்பது முதன்மை சட்டத்தின் நோக்கத்துக்கு முற்றிலுமாக பொருந்துகிறது. தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், இந்த விதிகளை உருவாக்க மாநில அரசுக்கு முழு உரிமை உண்டு, எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






