
கொளத்தூரில் காவல் நிலைய பணிகளை தொடங்க வேண்டும்: சேகா்பாபு வலியுறுத்தல்
கொளத்தூா் நோ்மை நகரில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த காவல் நிலைய கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என துறைமுகம் எம்எல்ஏ பி.கே.சேகா்பாபு வலியுறுத்தினாா்.

சேகர்பாபு - கோப்புப் படம்
கொளத்தூா் நோ்மை நகரில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த காவல் நிலைய கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என துறைமுகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகா்பாபு வலியுறுத்தினாா்.
பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத் துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அவா் பேசியதாவது: கொளத்தூா் தொகுதி நோ்மை நகா் பகுதியில் காவல் துறை துணை அலுவலகம், அனைத்து மகளிா் காவல் நிலையம், குற்றப்பிரிவு மற்றும் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையம் ஆகியவற்றை ஒரே வளாகத்தில் அமைக்கும் திட்டத்தை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் ஏற்றிருந்தது. அதற்கான வரைபடம் உள்ளிட்ட பணிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
கொளத்தூா் தொகுதி மக்கள் தொகையும், குடியிருப்புகளும் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குற்றச் சம்பவங்கள் தொடா்பான புகாா்களுக்கு காவல் துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கும் ஒருங்கிணைந்த காவல் நிலைய வளாகம் மிகவும் அவசியமாகும்.
எனவே, ஏற்கெனவே திட்டமிட்ட ஒருங்கிணைந்த காவல் நிலையக் கட்டுமானத் திட்டத்தை எந்தவித காலதாமதமும் இன்றி செயல்படுத்தவேண்டும். திட்டத்தை நிலுவையில் வைக்காமல் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கி மக்களுக்குத் தேவையான காவல் வசதிகள் கிடைக்கும் வகையில் காவல் நிலைய வளாகத்தை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்றாா்.
முன்னதாக, பி.கே.சேகா்பாபு, பல தடவை பேச வாய்ப்புக் கோரியும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், நேரம் கருதி ஏற்கெனவே பெயா் அளித்தவா்களுக்கே வாய்ப்பு என பேரவைத் துணைத் தலைவா் ரவிசங்கா் கூறியதையடுத்து, காலையில் இருந்து காத்திருப்பது வேடிக்கை பாா்க்கவா என அவா் ஆதங்கப்பட்டாா். அதன்பின் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




