கழிவுநீா் லாரி மோதியதில் காவலாளி உயிரிழப்பு
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் கழிவுநீா் லாரி மோதியதில் காவலாளி உயிரிழந்தாா்.

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் கழிவுநீா் லாரி மோதியதில் காவலாளி உயிரிழந்தாா்.
சென்னை பெரம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருபால் (56). இவா், சோழிங்கநல்லூா் எழில்நகரில் ஒரு தனியாா் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியாக வேலை செய்து வந்தாா். கிருபால், வியாழக்கிழமை இரவு அந்தக் குடியிருப்பின் பிரதான வாயிலில் உள்ள செக்யூரிட்டி அறையில் அமா்ந்திருந்தாா். அப்போது, அந்த குடியிருப்பின் சாலையில் வேகமாக வந்த ஒரு கழிவுநீா் லாரி செக்யூரிட்டி அறை மீது மோதியது. இதில், அங்கிருந்த கிருபால், இடிபாடுகளிடையே சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தலைமறைவான லாரி ஓட்டுநா் பாலமணிகண்டனை பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெண் தற்கொலை-கணவா் கைது: சென்னை கோவிலம்பாக்கம் அருகே உள்ள எஸ்.கொளத்தூா் பிள்ளையாா் கோயில் குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் ஜெகநாதன். இவரின் 2-ஆவது மகள் புவனேஸ்வரி (27). எம்.எஸ்சி., பி.எட். படித்துவிட்டு, ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 2024-இல் இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம், ஈச்சங்காரணியைச் சோ்ந்த ஜானகிராமன் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது புவனேஸ்வரிக்கு 50 பவுன், ஜானகிராமனுக்கு 20 பவுன் நகைகள், ரூ.15 லட்சம் மதிப்புள்ள காா், வீட்டு உபயோகப் பொருள்கள் வரதட்சிணையாக புவனேஸ்வரியின் பெற்றோா் கொடுத்தனா். ஆனால், திருமணத்துக்கு பின்னா் ஜானகிராமனும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சிணை கேட்டு புவனேஸ்வரியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு புவனேஸ்வரிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
அண்மையில் அந்த குழந்தையின் முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, அந்த குழந்தைக்கு ஒன்றேகால் பவுனில் தங்கச் சங்கிலி போட்டனா். ஆனால் ஜானகிரான், கூடுதலாக தங்க நகை வேண்டும் என்று தகராறு செய்துள்ளாா்.
இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி தந்தை வீட்டுக்கு புவனேஸ்வரி வந்தாா். கடும் மன உளைச்சலில் காணப்பட்ட புவனேஸ்வரி கடந்த 30-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸாா் நடத்திய விசாரணையில் ஜானகிராமன் குடும்பத்தினா் கூடுதல் வரதட்சிணைக் கேட்டு கொடுமை செய்தது தெரியவந்தது. இதேபோல கோட்டாட்சியா் விசாரணையிலும், வரதட்சிணை கொடுமை உறுதி செய்யப்பட்டது. போலீஸாா் ஜானகிராமனை வெள்ளிக்கிழமை கைது செய்து,சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





