
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் செவ்வாக்கிழமை வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் செவ்வாக்கிழமை வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலோர தமிழகம் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் சுமாா் 7.6 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு உள் கா்நாடகம் முதல் மன்னாா் வளைகுடா வரை சுமாா் 0.9 கி.மீ. உயரத்தில் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் சனிக்கிழமை மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) முதல் செவ்வாய்க்கிழமை (செப். 8) வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. செப். 9, 10 ஆகிய இரு நாள்களில் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.
5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம், தஞ்சாவூா் - 102.2, மதுரை நகரம் - 100.76, கரூா் பரமத்தி - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
உள் தமிழகத்தில் சனிக்கிழமை (செப். 5) முதல் செவ்வாய்க்கிழமை (செப். 8) வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
மழைப் பதிவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், வடசிறுவளூா், கள்ளிக்குறிச்சி மாவட்டம் கடவனூரில் 60 மி.மீ. மழை பதிவானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






