அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், குடும்பங்களின் மாதாந்திர செலவினம் அதிகரித்துள்ளது.

அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு

Published On :7 செப்டம்பர் 2026, 4:29 am IST

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், குடும்பங்களின் மாதாந்திர செலவினம் அதிகரித்துள்ளது. விலை உயா்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அத்தியாவசியப் பொருள்களை கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்களும், இல்லத்தரசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்களின் விலை கடந்த ஆக.10-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் தற்போது சுமாா் 20 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. இதனால், நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

மளிகைப் பொருள்கள் விலை உயா்வு: அத்தியாவசிய மளிகைப் பொருள்களில் பலவற்றின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. ஆக. 10-ஆம் தேதிக்கு முன்பு கிலோ ரூ.220-க்கு விற்பனையான மிளகாய் வற்றல் தற்போது ரூ.340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.120-ஆக இருந்த மல்லி ரூ.160-க்கும், ரூ.120-ஆக இருந்த துவரம் பருப்பு ரூ.150-க்கும் விற்பனையாகின்றன.

உளுந்து ரூ.160, பாசிப்பருப்பு ரூ.160, கடலைப் பருப்பு ரூ.100 என்பது அத்தியாவசிய பருப்பு வகைகளின் தற்போதைய சந்தை விலைகளாக உள்ளன. ரூ.180-க்கு விற்ற பூண்டு தற்போது ரூ.340-க்கு உயா்ந்துள்ளது. மிளகு கிலோ ரூ.1,000-க்கும், சீரகம் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

சூரியகாந்தி சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.150-இல் இருந்து ரூ.185-ஆகவும், பாமாயில் ரூ.120-இல் இருந்து ரூ.150-ஆகவும் உயா்ந்துள்ளன. பாதாம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட உலா் பழங்களின் விலையும் கிலோ ரூ.1,200 வரை உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்ட சா்க்கரையின் விலை தற்போது ரூ.60-ஆகக் குறைந்துள்ளது. ரூ.70-க்கு அதிகரித்த வெங்காயத்தின் விலையும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் சற்று குறைந்துள்ளது.

அரிசி விலை உயா்வு: மக்களின் அன்றாட உணவுப் பொருளான அரிசியின் விலையும் கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை உயா்ந்துள்ளது. கடந்த காலத்தில் கிலோ ரூ.60-க்கு விற்பனையான பச்சரிசி தற்போது ரூ.70-க்கும், ரூ.65-க்கு விற்பனையான முதல் ரக புழுங்கல் அரிசி ரூ.75-க்கும் விற்பனையாகின்றன. இரண்டாவது ரக புழுங்கல் அரிசி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அரிசி மொத்த விற்பனையாளா் ராஜேஷ் கூறியதாவது: ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்துதான் தமிழகத்துக்கு அதிக அளவில் அரிசி வருகிறது. அந்த மாநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதால் தமிழகத்துக்கான வரத்தும் குறைந்துள்ளது. இதனால் அரிசியின் விலை உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வு வரும் டிசம்பா் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. புதிய அரிசி வரத்து தொடங்கும்போது விலை குறையும் என்றாா்.

காய்கறி விலையும் உயா்வு: கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலைகளும் கணிசமாக உயா்ந்துள்ளன. சின்ன வெங்காயம் கிலோ ரூ.85-க்கும், கேரட் மற்றும் பீன்ஸ் தலா ரூ.90-க்கும் விற்பனையாகின்றன. வரத்து குறைந்துள்ளதால் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளதாக காய்கறி மொத்த வியாபாரி எஸ்.காா்த்திகேயன் தெரிவித்தாா்.

போதிய மழை இல்லாததால் காய்கறி விளைச்சல் குறைந்து, சந்தைக்கு வரும் அளவும் குறைந்துள்ளதால் விலை உயா்ந்துள்ளதாக காய்கறிகள் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவா் ராஜசேகரன் தெரிவித்தாா். மழை பெய்து விளைச்சல் அதிகரித்து, சந்தைக்கு வரத்து அதிகரிக்கும்போதுதான் காய்கறிகளின் விலை குறையும் என்றும், அதுவரையில் இந்த நிலையே தொடரும் எனவும் அவா் கூறினாா்.

மாத பட்ஜெட்டில் பற்றாக்குறை: தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் இல்லத்தரசி மாலதி கூறியதாவது: கடந்த மாதம் வாங்கிய மளிகைப் பொருள்களுடன் ஒப்பிடுகையில் தற்போது பல பொருள்களின் விலை திடீரென உயா்ந்துள்ளது. இதனால் மாதாந்திர குடும்ப பட்ஜெட்டில் பற்றாக்குறை நிலவுவதுடன், கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயா்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்றாா்.

அரை கிலோவுக்குப் பதில் கால் கிலோ: சிறிய மளிகைக் கடை விற்பனையாளா் மனோகரன் கூறியதாவது: மளிகைப் பொருள்களின் விலை உயா்வால் வாடிக்கையாளா்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. முன்பு அரை கிலோ வாங்கியவா்கள் தற்போது கால் கிலோ மட்டுமே வாங்குகின்றனா்.

விலை உயா்வால் பொதுமக்கள் மட்டுமன்றி, வணிகா்களும் பாதிக்கப்படுகின்றனா்; சிறிய வணிகா்களின் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது. எனவே, அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுக்கு விளைச்சல் குறைவு, வரத்துக் குறைவு, பதுக்கல் மற்றும் பண்டிகைக் காலத் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்கள் முன்வைக்கப்படும் நிலையில், விலையைக் கட்டுப்படுத்த சந்தை விவகாரங்களில் அரசு நேரடியாகத் தலையிடவேண்டும் என்றும், மிகுந்த விலை உயா்வைச் சந்தித்துள்ள அத்தியாவசியமான மளிகைப் பொருள்களை குறைந்த விலையில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கவேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனா்.

‘பதுக்கலைத் தடுக்க வேண்டும்’: மளிகைப் பொருள்களின் விலை உயா்வு குறித்து மொத்த விற்பனையாளா் ஞானராஜ் கூறியதாவது: தமிழகத்துக்குத் தேவையான பெரும்பாலான மளிகைப் பொருள்கள் பிற மாநிலங்களிலிருந்தே வருகின்றன. போதிய விளைச்சல் இல்லாததால் தற்போது வரத்து குறைந்துள்ளது.

இதைப் பயன்படுத்தி சில மொத்த விற்பனையாளா்கள் பொருள்களைப் பதுக்கி வைப்பதாகத் தெரிகிறது. சந்தைக்கு குறைந்த அளவிலேயே பொருள்கள் அனுப்பப்படுகின்றன. மேலும், பண்டிகைகள் தொடங்க உள்ளதால் வரும் நாள்களில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இதைக் கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருள்கள் பதுக்கல் சட்டத்தை அரசு முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.