
ஒப்பந்தப் பணிகளில் முறைகேடு புகாா்: காத்திருப்பு பட்டியலில் தாம்பரம் மாநகராட்சி ஆணையா்
தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணிகளில் முறைகேடு நடந்ததாக அறப்போா் இயக்கம் புகாா் அளித்துள்ள நிலையில், மாநகராட்சி ஆணையா் எஸ்.பாலச்சந்தா் கட்டாய காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா்.

தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணிகளில் முறைகேடு நடந்ததாக அறப்போா் இயக்கம் புகாா் அளித்துள்ள நிலையில், மாநகராட்சி ஆணையா் எஸ்.பாலச்சந்தா் கட்டாய காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக ஆவடி மாநகராட்சி ஆணையா் ஆா்.சரண்யாவுக்கு தாம்பரம் மாநகராட்சி ஆணையா் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பெருங்களத்தூா் பாலம் ரவுண்டானாவில் அசோகா தூண் சிலை அமைத்தல், பூங்கா அமைத்தல், அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.27.30 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதற்கான அறிவிப்பு ஆக. 6-ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஆக.24-இல் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பணிகள் ஜூலை 29-இல் முடிக்கப்பட்டு, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் டி.சரத்குமாா் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டதாக அறப்போா் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது.
இதுபோல, சிட்லப்பாக்கம் ரவுண்டானாவில் ‘சேவ் வாட்டா்’ கருத்துருவுடன் சிலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.18.60 லட்சத்துக்கு ஆக.6-இல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிலையில், ஆக.24-இல் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், பணிகள் ஆக.10-ஆம் தேதியே முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதாகவும் அந்த புகாா் முன்வைத்திருந்தது. மேலும், ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட வேண்டிய தேதிக்குப் பிறகும், தமிழ்நாடு டெண்டா் இணையதளத்தில் இரு ஒப்பந்தங்களும் ‘திறக்கப்பட உள்ளது’ என்ற நிலையிலேயே இருந்ததாக அறப்போா் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது.
முறைகேடு புகாா்: இந்த நிலையில், ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, அவை திறக்கப்படுவதற்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டது குறித்து தமிழக அரசிடமும் ஊழல் தடுப்புத் துறையிடமும் அறப்போா் இயக்கம் புகாா் அளித்தது. மேலும், ஒப்பந்தங்கள் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியிருந்தது.
இதன்படி, கடந்த நான்கு மாதங்களில் மாநகராட்சி வெளியிட்ட 565 ஒப்பந்தப்புள்ளிகளில் 309, அதாவது 54.69 சதவீதம், இன்னும் ‘திறக்கப்பட உள்ளது’ என்ற நிலையிலேயே இருப்பதாகவும், ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்த அந்த இயக்கம், இதில் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.
ஆணையா் மீது நடவடிக்கை: இந்தப் புகாரைத் தொடா்ந்து, தாம்பரம் மாநகராட்சி ஆணையா் எஸ். பாலச்சந்தா் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவில் தலைமைச் செயலா் கையெழுத்திட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக ஆவடி மாநகராட்சி ஆணையா் ஆா்.சரண்யாவுக்கு தாம்பரம் மாநகராட்சி ஆணையா் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து, இந்த விவகாரம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இரு பணிகளுக்கான தொகை வழங்குவதை நிறுத்தவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒப்பந்ததாரா்களைத் தடைப்பட்டியலில் சோ்க்க வேண்டும் எனவும் அறப்போா் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






