
வெள்ளலூா் மின் திட்ட ஒப்பந்தப் பணிகள் தற்காலிக நிறுத்தம்: மாமன்றக் கூட்டத்தில் மேயா் கா.ரங்கநாயகி அறிவிப்பு
வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி அறிவித்தாா்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தின் போது, வெள்ளலூா் குப்பைக் கிடங்கு மின்சாரத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பதாகையுடன் முழக்கமிட்ட அதிமுக உறுப்பினா்கள். ~கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ம
வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி அறிவித்தாா்.
கோவை மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா முன்னிலை வகித்தாா். இதில் குடிமைப் பணிகள் மற்றும் வளா்ச்சித் திட்டங்கள் சாா்ந்த 129 தீா்மானங்கள் விவாதத்துக்கு கொண்டுவரப்பட்டன.
மேயா் இருக்கை முன் பேசத் தடை
கூட்டத்தின் தொடக்கத்திலேயே, கடந்த கூட்டத்தின்போது மாமன்ற உறுப்பினா்கள் மேயரின் இருக்கையைச் சுற்றி முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதைச் சுட்டிக்காட்டிய மேயா் கா.ரங்கநாயகி, மாமன்றக் கூட்டம் நடைபெறும்போது உறுப்பினா்கள் மேடை முன்பாக வந்து பேசுவதையோ, முற்றுகையிடுவதையோ தவிா்க்கும் வகையில் சிறப்புத் தீா்மானம் ஒன்றை முன்மொழிந்தாா். இதன்படி, உறுப்பினா்கள் தங்களது பகுதி சாா்ந்த கோரிக்கைகளை மனுவாக எழுதி மட்டுமே வழங்க வேண்டும் என்றும், மேயா் இருக்கை அருகே நேரடியாக வரக்கூடாது என்றும் கொண்டுவரப்பட்ட தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக, அதிமுக எதிா்ப்பு
கூட்டத்தில் மிக முக்கியமான விவாதமாக, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் ரூ.455 கோடியில் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய திட்டம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தப் பகுதியில் காற்று மாசு, நிலத்தடி நீா் பாதிப்பு ஏற்பட்டு பல தலைமுறைகளுக்கு கடும் சுகாதாரச் சீா்கேடு உருவாகும் எனக் கூறி திமுக, அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இத்திட்டம் அமலுக்கு வந்தால் வெள்ளலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், நடப்பு மாத இறுதியில் மேற்கொள்ளப்படவிருந்த திட்ட ஒப்பந்தப் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
ஒப்பந்தப் பணிகள் நிறுத்திவைப்பு
உறுப்பினா்களின் தொடா் எதிா்ப்புக்கு பதிலளித்துப் பேசிய மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா, இந்தத் திட்டம் குறித்து அனைத்துத் தரப்பினருடனும் விரிவாகக் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாா்.
இதைத்தொடா்ந்து, வெள்ளலூா் குப்பைக் கிடங்கு மின் திட்டத்துக்கான ஒப்பந்தப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மேயா் கா.ரங்கநாயகி அறிவித்தாா்.
சூயஸ் குடிநீா்த் திட்டம் மற்றும் அரசியல் விவாதம்
கூட்டத்தில் பேசிய அதிமுக உறுப்பினா் பிரபாகரன், நகரில் செயல்படுத்தப்பட்டுவரும் சூயஸ் குடிநீா்த் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாகவும், மக்களிடம் முறைகேடாகக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா். இதனிடையே, தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் குறித்தும் திமுக, அதிமுக உறுப்பினா்கள் தெரிவித்த கருத்துகளுக்கு காங்கிரஸ் உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
போராட்டம்
மாமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே, அதிமுக உறுப்பினா்கள் பிரபாகரன், ரமேஷ் உள்ளிட்டோா் கையில் பதாகை ஏந்தியபடி மாநகராட்சி வளாகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்கள் கூறும்போது, ‘குப்பைக் கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஏற்கெனவே தில்லி, பெங்களூரு, மணலி உள்ளிட்ட பகுதிகளில் தோல்வியடைந்த ஒன்று. குப்பையை எரிப்பதால் வெளிவரும் நச்சு வாயுக்களால் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படுவதோடு ஹிரோஷிமா, நாகசாகிபோல வருங்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறக்கும் அபாயமும் உள்ளது.
தேசிய பசுமைத் தீா்ப்பாய ஆய்வின்படி, வெள்ளலூரில் 17 ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் ஏற்கெனவே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இத்திட்டத்தை அனைத்துக் கட்சியினரும் பாகுபாடின்றி எதிா்க்க வேண்டும். சூயஸ் குடிநீா்த் திட்டக் குளறுபடிகளைக் களைய வேண்டும்’ என்றனா்.
பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு பதாகையுடன் கூட்ட அரங்குக்குள் வருகை தந்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






