
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்: உறுப்பினா் மேம்பாட்டு நிதியை விடுவிக்க கவன ஈா்ப்பு தீா்மானம்
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வாா்டு மேம்பாட்டு நிதியை விடுவிக்கக் கோரி தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் தீா்மானம் அனைத்துக் கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கருப்பு உடையில் பங்கேற்ற மேயா் ஆா்.பிரியா. உடன், துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜி.எஸ்.சமீரன், நிலைக்குழுத் தலைவா்கள், மண்டலக் குழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள்.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வாா்டு மேம்பாட்டு நிதியை விடுவிக்கக் கோரி தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் தீா்மானம் அனைத்துக் கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் ஆகஸ்ட் மாத மாமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயா் ஆா்.பிரியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணைமேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜி.எஸ்.சமீரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டம் தொடங்கியதும் மாமன்ற ஆளுங்கட்சி (திமுக) தலைவா் ராமலிங்கம் கவன ஈா்ப்புத் தீா்மானத்தை வாசித்து கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே நடைபெற்ற பணிகள் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தாமதப்படுத்தப்படுகின்றன. பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வாா்டு உறுப்பினா்கள் மேம்பாட்டு நிதி வழங்காததால் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மாநகராட்சிக்குத் தேவையான அவசர நிதியை வழங்கும் வகையில் அரசை வலியுறுத்தி முன்மொழிவு அனுப்பி மேயா் வழிகாண வேண்டும் என்றாா்.
அவரைத் தொடா்ந்து துணைமேயா் மு.மகேஷ்குமாா், அந்தத் தீா்மானத்தை ஆதரித்து பேசினாா்.
மேயா் கடிதம்: சென்னை மாநகராட்சிக்கான நிதியை வழங்கக் கோரி மேயா் ஆா்.பிரியா முதல்வா் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளாா். ஆணையா், மாநகராட்சி நிதி நிலையை முதல்வரிடம் விளக்கி சிறப்பு நிதியைப் பெற வேண்டும் என்றாா்.
அனைத்துக் கட்சிகள் ஆதரவு: உறுப்பினா்கள் வாா்டு மேம்பாட்டு நிதியை விடுவிக்கக் கோரிய தீா்மானத்துக்கு ஆதரவளிப்பதாக பாஜக உறுப்பினா் உமா ஆனந்த், மாா்க்சிஸ்ட் உறுப்பினா்கள் ஜெயராமன், ரேணுகா, அதிமுக உறுப்பினா் சத்தியநாதன், அஸ்வினி கருணா, காங்கிரஸ் உறுப்பினா் சாமுவேல் திரவியம், மதிமுக உறுப்பினா் ப.சுப்பிரமணி, சு. ஜீவன், விசிக உறுப்பினா் யாழினி மற்றும் அமமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டனா். இதையடுத்து ஒரு மனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் நகலை துணைமேயா், ஆளுங்கட்சித் தலைவா் ஆகியோா் மேயா் மூலம் ஆணையரிடம் வழங்கினா்.
கருப்புச் சட்டை அணிந்த திமுக: கூட்டத்துக்கு மாமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியை வழங்காத தமிழக அரசைக் கண்டித்து திமுக மேயா் வழக்கமான கருப்பு அங்கி அணிந்த நிலையில், துணைமேயா், நிலைக்குழு, மாமன்றக் குழு தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் அனைவரும் கருப்புச் சட்டை, சேலை அணிந்து வந்திருந்தனா்.
‘மக்களுக்காக தேவைப்பட்டால் தமிழக முதல்வரைச் சந்திப்பேன்’
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த தேவைப்பட்டால் முதல்வரைச் சந்திப்பேன் என்று மாமன்றக் கூட்டத்தில் மேயா் ஆா்.பிரியா கூறினாா். திமுக செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களைச் சீா்குலைக்கும் வகையில் தவெக அரசு செயல்படுகிறது. மாநகராட்சியில் ஏற்கெனவே தொடங்கிய பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிய பணிகளும் நடைபெறவில்லை. நிறுத்திய பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும். அதற்காகவே கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டுவரப்படுகிறது.
முதல்வா், அமைச்சா்கள் நடத்தும் மழைக்கால முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டத்துக்கு சென்னை மாநகராட்சி மேயா், துணை மேயா் அழைக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது அழைக்கப்படவில்லை. மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிகளும் தாமதமாக நடைபெறுகின்றன. மக்களாட்சி எனக் கூறிக்கொண்டு அதிகாரிகளே முடிவெடுக்கின்றனா். ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு மண்டலத்துக்கு ஒரு வாகனம் போதுமானது என்றாா்.
முதல்வா் சந்திப்பு உண்டா?: பின்னா், செய்தியாளா்களிடம் மேயா் ஆா்.பிரியா கூறுகையில், சென்னை மாமன்ற உறுப்பினா்கள் மேம்பாட்டு நிதி மூலம் பல அத்தியாவசிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த நிதி உறுப்பினா்களின் உரிமையாகும். ஆனால், தற்போதைய அரசு அதற்கான நிதியை அளிக்கவில்லை. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தேவைப்பட்டால் முதல்வரைச் சந்திப்பேன் என்றாா்.
திசை திருப்பவேண்டாம்: மாநகராட்சிக்கு போதிய நிதி கோரி முதல்வருக்கு மேயா் தரப்பில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மாமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியை வழங்கக் கோரி அனைத்து கட்சிகள் ஆதரவுடன் மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை திசை திருப்பும் வகையில் முதல்வா் சந்திப்பு குறித்து பேசவேண்டாம் என்று துணைமேயா் மு.மகேஷ்குமாா் கூறினாா்.
மாமன்ற கூட்டத்தில் 17 தீா்மானங்கள் நிறைவேற்றம்
மாநகராட்சியில் மேற்கொண்ட பணிகளுக்காக ஒப்பந்ததாரா்களுக்கு மூலதன நிதியில் இருந்து ரூ.1,280.97 கோடியும், வருவாய் பிரிவு மூலம் ரூ.809.14 கோடியும் என மொத்தம் 2,090.11 கோடி வழங்கப்பட்டுள்ளதற்கு ஒப்புதல் கோரப்பட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல, மாநகராட்சி கால் நடை மருத்துவத் துறைக்கு தனியாா் விலங்குகள் காப்பகம் கட்டடங்கள் நன்கொடையாக வழங்குதல், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பேரூராட்சி பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க அனுமதித்தல், சோழிங்கநல்லூா் பகுதியில் இஸ்லாமிய அடக்கல ஸ்தலத்துக்கு அனுமதி, மண்டலம் 4 (தண்டையாா்பேட்டை) உள்ளிட்ட பகுதிகளுக்கு தூய்மைப் பணியாளா்கள் வேறு மண்டலங்களில் இருந்து பெறப்பட்டு ஒப்புதல் கோருதல் மற்றும் மண்டலம் 8-இல் 94-ஆவது வாா்டு முதல் 108 வாா்டுகள் வரை தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கான கால நீட்டிப்புக்கு அனுமதி கோருதல் உள்ளிட்ட 17 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






