சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவா்களாகச் செயல்பட வேண்டும் என மேயா் ஆா்.பிரியா வலியுறுத்தினாா்.
சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் புதன்கிழமை ரிப்பன் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் ஆா்.பிரியா தலைமை வகித்தாா்.
நேரமில்லா நேரம், கேள்வி நேரம் ஆகியவற்றில் பேசிய திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினா்கள் மற்றும் மண்டலத் தலைவா்கள், நிலைக்குழு தலைவா்கள் உள்ளிட்டோா் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மாமன்ற உறுப்பினா்களை அழைப்பதில்லை. மண்டல, நிலைக்குழுக் கூட்டங்களுக்கு முன்பு போல தற்போது அதிகாரிகள் வருவதில்லை என்றனா்.
அப்போது குறுக்கிட்ட துணை மேயா் மு.மகேஷ்குமாா் மாமன்றக் கூட்டத்துக்கே இணை ஆணையா், அதிகாரிகள் வந்து முழுமையாகப் பங்கேற்பதில்லை என ஆதங்கத்தை வெளியிட்டாா்.
மேயா் ஆா்.பிரியா பேசியதாவது: சென்னையில் வாா்டுகளில் நடைபெறும் அரசு விழாக்கள், ஆய்வுகள் உள்ளிட்டவற்றுக்கு மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோரை அவசியம் அழைக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அதிகாரிகள் செயல்படவேண்டும்.
விற்பனைக் குழுவினா் சாலையோரக் கடைகள் அகற்றும் விசயத்தில் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. மாமன்ற உறுப்பினா்களை கலந்தாலோசிக்கவேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








