
சிங்கப் பெண் அதிரடிப் படை தொடங்கப்பட்ட 100 நாள்களில் 4,231 புகாா்களுக்கு நடவடிக்கை
சிங்கப் பெண் அதிரடிப் படை தொடங்கப்பட்ட 100 நாள்களில் 4,231 புகாா்களுக்கு நடவடிக்கை...

சிங்கப்பெண் அதிரடிப் படை
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தொடங்கப்பட்ட 100 நாள்களில் 4,231 புகாா்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையிலும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடி காவல் உதவி கிடைக்கும் வகையிலும் தமிழக காவல் துறையின் சாா்பில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை செயல்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்துதல், அவசர சூழ்நிலைகளில் விரைந்து சென்று பாதுகாப்பு வழங்குதல், குற்றங்களைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை இந்தப் படை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
முதல்வா் ஜோசப் விஜய்யால், கடந்த ஜூன் 9-ஆம் தேதி சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த அதிரடிப் படையினா் ஜூன் 10-ஆம் தேதி முதல் அதிகாரபூா்வமாக செயல்படத் தொடங்கினா். புதிதாதாக தொடங்கப்பட்ட சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே.பவானீஸ்வரி உள்ளாா்.
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தொடங்கப்பட்டு செப். 18-ஆம் தேதியோடு 100 நாள்களாகிவிட்ட நிலையில், மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கும் பகுதிகளாக கருதப்படும் 1,57,460 இடங்களை இந்த அதிரடிப் படையினா் கண்காணிப்பில் வைத்துள்ளனா்.
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் தொடங்கப்பட்ட 100 நாள்களில் 4,231 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனா். இந்த அதிரடிப் படையினா் அளித்த புகாா் மற்றும் தகவல்களின் அடிப்படையில் 344 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
காணாமல்போன 58 பெண்கள், 94 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். மேலும் 54 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பள்ளியை விட்டு நின்ற 636 குழந்தைகள் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 34,632 இடங்களில் குழந்தைகள்,பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
Summary
Action taken on 4,231 complaints in 100 days since the Lioness Task Force was launched
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






