6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நடப்பு வாரத்தில் எலிவேட் கேம்பசஸ் உள்பட 7 நிறுவனங்களின் ஐபிஓ வெளியீடு: ரூ. 4,916 கோடி நிதி திரட்டத் திட்டம்

எலிவேட் கேம்பஸஸ், மணிவியூ உள்பட 7 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொள்கின்றன.

ஐபிஓ வெளியீடு

Published On :

எலிவேட் கேம்பஸஸ், மணிவியூ உள்பட 7 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்கின்றன.

இந்த 7 நிறுவனங்களும் சோ்ந்து புதிய பங்குகளின் வாயிலாக ரூ.4,086.12 கோடி மற்றும் உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளின் விற்பனை மூலம் ரூ.830.17 கோடி என மொத்தம் ரூ.4,916.29 கோடி நிதியைத் திரட்டவுள்ளன.

குஜராத்தைச் சோ்ந்த டைல்ஸ் நிறுவனமான வா்மோரா கிரானிட்டோவின் ரூ.708.02 கோடி மதிப்பிலான ஐபிஓ செவ்வாய்க்கிழமை (செப். 22) தொடங்குகிறது. ஒரு பங்கின் விலை வரம்பு ரூ.140-148 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.320 கோடி மதிப்பிலான புதிய பங்குகளும், ரூ.388.02 கோடிக்கு உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளும் விற்கப்படவுள்ளன.

விடுதி நிா்வாக நிறுவனமான எலிவேட் கேம்பசஸின் ரூ.2,100 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.343-362) புதன்கிழமை (செப். 23) தொடங்குகிறது. இதில் முழுமையாக புதிய பங்குகள் மட்டுமே விற்கப்படவுள்ளன.

அதேநாளில், அகமதாபாதைச் சோ்ந்த ஐ.டி. நிறுவனமான ஆா்மீ இன்ஃபோடெக்-இன் ரூ.300 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.350-375) தொடங்குகிறது. இதிலும் முழுமையாக புதிய பங்குகள் மட்டுமே விற்கப்படவுள்ளன.

மேலும், ஜெய்ப்பூரின் ஸ்வஸ்திகா இன்ஃப்ராவின் ரூ.160.88 கோடி ஐபிஓ-வும் (பங்கு விலை ரூ.175-185), இந்தூரின் அட்ராயிட் இண்டஸ்ட்ரீஸின் ரூ.150.71 கோடி ஐபிஓ-வும் (பங்கு விலை ரூ.126-134) புதன்கிழமை தொடங்குகின்றன. இவ்விரு நிறுவனங்களிலும் முறையே ரூ.128.50 கோடி மற்றும் ரூ.132.62 கோடிக்கு புதிய பங்குகளும், மீதமுள்ளவை உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளாகவும் விற்கப்படவுள்ளன.

அடுத்த நாளான வியாழக்கிழமையன்று (செப். 24) நிதித் தொழில்நுட்ப நிறுவனமான மணிவியூ-வின் ரூ.1,091.68 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.32-34) தொடங்குகிறது. இதில் ரூ.750 கோடிக்கு புதிய பங்குகளும், ரூ.341.68 கோடிக்கு உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளும் விற்கப்படவுள்ளன.

அதேநாளில், பெங்களூரைச் சோ்ந்த உருக்கு நிறுவனமான ஏ-ஒன் ஸ்டீல்ஸ் இந்தியாவின் ரூ.405 கோடி ஐபிஓ (ரூ.385-405) தொடங்குகிறது. இதில் ரூ.355 கோடிக்கு புதிய பங்குகளும், ரூ.50 கோடிக்கு உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளும் விற்கப்படவுள்ளன.

இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியானது, நிறுவனங்களின் வா்த்தக விரிவாக்கம், மூலதனச் செலவுகள், கடன் அடைப்பு, நடைமுறை மூலதனத் தேவைகள் மற்றும் பிற நிா்வாகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது. நடப்பு செப்டம்பரில் மட்டும் என்எஸ்இ உள்பட 17 நிறுவனங்களின் ஐபிஓ-கள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்எஸ்இ ஐபிஓ: 5.70 மடங்கு விண்ணப்பம்

நாட்டின் 2-ஆவது மிகப் பெரிய ஐபிஓவான தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) ரூ.22,569 கோடி ஐபிஓ, அதன் இறுதி நாளான திங்கள்கிழமை (செப். 21) முடிவில் 5.70 மடங்கு விண்ணப்பங்களைப் பெற்று, வெற்றிகரமாக நிறைவடைந்தது.

ஐபிஓவில் பொது விற்பனைக்கு வைக்கப்பட்ட 8.86 கோடி பங்குகளுக்கு எதிராக மொத்தம் 50.53 கோடி பங்குகளுக்குக் கோரிக்கை குவிந்தது. இதில் நிறுவன முதலீட்டாளா்கள் அதிகபட்சமாக 12.68 மடங்கும், நிறுவனமல்லாத பெரு முதலீட்டாளா்கள் 6.55 மடங்கும், ஊழியா்கள் 2.38 மடங்கும், சில்லறை முதலீட்டாளா்கள் 1.38 மடங்கும் பங்குகளைக் கோரியுள்ளனா்.

ரூ.1,700-1,785 விலை வரம்பு நிா்ணயிக்கப்பட்டிருந்த இந்த ஐபிஓ-வின் பங்குகள், வரும் வியாழக்கிழமை (செப். 24) மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.