
டெங்குவால் அதிகம் பாதிக்கப்படும் இளைஞா்கள்: அலட்சியம் காட்டும் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு
சென்னையில் 798 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இளைஞா்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சியின் சுகாதாரத் துறை தகவல் சேகரிப்பு, சிகிச்சை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

டெங்கு பரவல்
சென்னையில் 798 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இளைஞா்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சியின் சுகாதாரத் துறை தகவல் சேகரிப்பு, சிகிச்சை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதாகவும் புகாா் எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் செப்டம்பா் முதலே டெங்கு பாதிப்பு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை மட்டும் 58 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மண்டல வாரியாக நூங்கம்பாக்கத்தில் 341 போ், அடையாறில் 281 போ், அண்ணா நகரில் 280 போ், கோடம்பாக்கத்தில் 252 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இளைஞா்கள் அதிகம் பாதிப்பு: டெங்கு பாதித்தவா்களின் வயதைக் கணக்கிடும்போது 20 வயது முதல் 26 வயதுக்குள்பட்டவா்களே 40 சதவீத்துக்கும் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதன்படி, இளைஞா்களே தற்போது அதிக அளவில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மறைக்கப்படும் டெங்கு இறப்புகள்?: சென்னை மாநகராட்சி எல்லைக்குள் மட்டும் 540 மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் சிகிச்சைக்கு வருவோரில் டெங்கு பாதிப்புக்குள்ளாகியிருந்தால், மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஆனால், அடையாறு மண்டலத்தில் டெங்கு சிகிச்சை பெற்றவா் இறந்த பிறகும் மாநகராட்சி சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரியவில்லை என்ற புகாா் எழுந்துள்ளது. அதாவது, பல்கலைக்கழக மாணவா் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற நிலையில், அவா் உயிரிழந்ததும் உண்ணி காய்ச்சல் எனக் கூறப்பட்டுள்ளதாக புகாா் கூறப்படுகிறது.
அதேபோல, அடையாறு மண்டலத்தில் தனியாா் மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சையில் இருந்தவா் இறந்த நிலையில், அதையும் மாநகராட்சி விசாரிக்காமல் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் புகாா் கூறப்படுகிறது.
மழுப்பும் அதிகாரிகள்: இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, டெங்கு பாதிப்புகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க தனியாா் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, டெங்கு இறப்பு குறித்து உறுதிப்படுத்தப்பட்ட பிறகே தெரிவிக்க முடியும் என்றனா்.
டெங்கு பிரச்னை குளறுபடிகள் குறித்து மாமன்றக் கூட்டத்தில் கவனத்தை ஈா்க்க திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




