சென்னை- கிழக்கு கடற்கரை சாலையில் இடைக்கழிநாடு பேரூராட்சியிலுள்ள, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலம்பரைக்கோட்டை சிதிலமடைந்து வருகிறது.
தமிழக வரலாற்றில் சங்ககால ஆதாரங்கள் என்றும் நீங்கா வரலாற்றுச் சுவடுகளாக உள்ளன. இத்தகைய வரலாற்றுச் சுவடுகள் சங்ககால இலக்கியங்களில் காணப்படுகின்றன.
சங்ககால இலக்கியமான சிறுபாணாற்றுப்படையில், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்துள்ள இடைக்கழிநாடு பகுதி பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி, கிழக்கில் உள்ள வங்கக் கடலுக்கு மிக அருகிலும் இடைக்கழிநாடு பேரூராட்சி அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் ஒரு பகுதியாக உள்ள ஆலம்பரை மீனவக் குப்பத்தில் ஆலம்பரைக்கோட்டை உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடப்பாக்கத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும், கல்பாக்கத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 105 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும் ஆலம்பரைக்கோட்டை உள்ளது.
தமிழக சுற்றுலாப் பயணிகளையும், திரைப்படத் துறையினரையும் அதிக அளவில் கவர்ந்திழுக்கின்ற இடமாகத் திகழ்வது இந்தக் கோட்டை. கிழக்கு கடற்கரையை ஒட்டி, இடைக்கழிநாடு பகுதியில் நவாப்களின் ஆட்சிக்காலத்தில் துறைமுகப் பட்டினத்துடன் இணைந்ததாக அழகிய கோட்டை கட்டப்பட்டது.
இக்கோட்டையின் கிழக்கில் சிறிய ஆறு வங்கக் கடலினை இணைக்கும் முகத்துவாரமாக அமைந்துள்ளது. வெள்ள நீராலும், கடலலைகளாலும் ஆற்றுக்கும் கடலுக்கும் இடையே பரந்த மணல்திட்டு, அதைச் சுற்றி நொச்சி, தென்னை போன்ற நிழல்தரு மரங்கள், கண்ணுக்கு விருந்தளிக்கும் வனச்சோலை என இப்பகுதி காட்சி அளிக்கிறது.
கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் மன்னர்களால் இக்கோட்டை சுமார் 15 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டது. பின்னர் நவாப் ஆட்சிக்காலத்தில் ஆலம்பரை பகுதி துறைமுகப் பட்டினமாகச் செயல்பட்டது. இந்தக் கோட்டையின் கீழ்புறம், கப்பல்களில் இருந்து வணிகப் பொருள்களை ஏற்றி இறக்கும் படகுத்துறையாகச் செயல்பட்டது.
இந்த படகுத்துறையின் பகுதிகளை இப்பொழுதும் காணலாம். இங்கிருந்து உப்பு, பட்டு சரிகை, துணிவகைகள் உள்ளிட்ட பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
ரகசிய அறைகள்
இந்தக் கோட்டையின் உள்ளே 3 ரகசிய அறைகள் உள்ளன. அங்கு தான் நாணயச்சாலை செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள நாணயச்சாலையில் உற்பத்தியான ஆலம்பரை வராகன், ஆலம்பரை காசு ஆகிய நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டன.
இந்த நாணயங்களை அச்சிடும் பொறுப்பாளராக பொட்டி பந்தன் நியமிக்கப்பட்டு செவ்வனே கவனித்ததுடன், கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் ஆலயத்தையும் குளத்தையும் வெட்டியுள்ளார்.
கோட்டையின் மையப்பகுதியில் ஒரு மசூதி, கோட்டைக்கு வடபகுதியில் இஸ்லாமியர்களின் கல்லறைகள் ஆகியவை உள்ளன.
கோட்டைக்கு தெற்குப் பகுதியில் இந்து மதத்தினர் வழிபடும் வகையில் ஆலத்தம்மன் கோயில் உள்ளது. கோட்டைக்கும், ஆலத்தம்மன் கோயிலுக்கும் இடையே ஒரு சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை தற்போது செடி, கொடிகளாலும், மணல் மேட்டாலும் மூடப்பட்டுள்ளது. கோட்டை பெருஞ்சுவர்களில் புதைகுழிகளும் உள்பகுதியில் கிணறும் உள்ளன.
கடந்த 1735-இ இப்பகுதியை நவாப் தோஸ்த் அலிகான் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அச்சமயத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து ஆட்சிப்பகுதியைக் கைப்பற்றத் திட்டமிட்டனர். எனவே ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்க்க உதவ வேண்டும் என்று கோரி பிரெஞ்ச் தளபதிகளிடம் பேச்சு நடத்தி உடன்படிக்கை ஏற்பட்டது. அதற்கு உரிய பலனாக ஆலம்பரைக் கோட்டையை அன்பளிப்பாகத் தருவதாக நவாப் ஒப்புக்கொண்டார்.
அதன்படி இக்கோட்டையை புதுச்சேரி பிரெஞ்ச் தளபதி டியூப்ளேவுக்கு நவாப் சுபேதார் முசாபர்சிங் அன்பளிப்பாக அளித்தார்.
இதனால் அதிக கோபம் கொண்ட ஆங்கிலேய தளபதிகள் 1760-இல் பிரெஞ்ச் படைகளின் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றனர்.
பிரெஞ்ச் படை மீதான கோபத்தைத் தணிக்க, அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த ஆலம்பரைக் கோட்டையைக் கைப்பற்றி ஆங்கிலேயப் படையினர் சிதைத்தனர்.
சுற்றுலாத்தலம்
ஆங்கிலேயப் படையினரால் சிதைக்கப்பட்ட கோட்டையின் எஞ்சிய பகுதிகளே இன்று நாம் காணும் கோட்டையாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை, பல தமிழ் திரைப்படங்களுக்கும், தொலைக்காட்சித் தொடர்களுக்கும் படப்பிடிப்பு நடத்தும் தளமாக விளங்கி வருகிறது.
ஆலம்பரைக்கோட்டைக்குச் செல்கின்ற நுழைவாயிலில், கோட்டை வரலாற்றைக் குறிக்கும் தகவல் பலகை உள்ளது. மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில், பாதுகாக்கப்பட்ட இடமாக இக்கோட்டை பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் வந்து செல்கின்றனர்.
சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறங்கி, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஆலம்பரைக் கோட்டையைக் காண நடந்துதான் செல்ல வேண்டும். இங்கு செல்ல உரிய பேருந்து வசதி இல்லை. இருசக்கர வாகனம், ஷேர் ஆட்டோ ஆகியவற்றின் மூலமாக பெரும்பாலோர் இங்கு வந்து செல்கின்றனர்.
இப்பகுதிக்கு வந்து செல்லும் வகையில், கிழக்கு கடற்கரைச்சாலையை ஒட்டி இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகம் அருகில் பெரிய தகவல் பலகை வைக்கவேண்டும்.
இக்கோட்டையின் உள்பகுதியை சமூகவிரோதச் செயல்களுக்கான இடமாக ஒருசிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டால், கோட்டைப் பகுதிக்கும், அதன் அருகே வசித்து வரும் மீனவப் பகுதிக்கும், இரவுநேரத்தில் மின்னொளி கிடைக்கும். அப்போது சமூக விரோதிகளின் நடமாட்டம் குறையும்.
உருவப்படும் செங்கற்கள்
18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையின் சுவர்களை உடைத்து, இதிலுள்ள செங்கல்களை சிலர் சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர். கோட்டைக்கு பாதுகாவலர் இல்லாததால், தொடர்ந்து செங்கல் திருட்டு நடைபெறுகிறது. இந்நிலை தொடர்ந்தால் கோட்டை சுவர்கள் மிக விரைவில் காணாமல் போய்விடும்.
இக்கோட்டை கட்டடங்களைப் பாதுகாக்க, சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். கோட்டையின் உள்வளாகத்தில் முள்புதர் வளர்ந்துள்ளதால், விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. இந்த முள்புதர்களை அகற்ற வேண்டும்.
வருங்கால சந்ததியினருக்கு முந்தைய வரலாற்றைக் கூறும் ஆலம்பரைக் கோட்டை அழிந்து போகாமல் தடுக்க, தொல்பொருள் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

