தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சிறிய வசதிகள் கூட இல்லாத சிறுநகர் கிராமம்!

மதுராந்தகம் அருகே உள்ள சிறுநகர் கிராமத்துக்கு பேருந்து வசதி, சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். சித்தாமூர் ஊராட்சி ஒன்ற

News image
Updated On :25 நவம்பர் 2016, 9:42 pm

மதுராந்தகம் அருகே உள்ள சிறுநகர் கிராமத்துக்கு பேருந்து வசதி, சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது சிறுநகர். இங்குள்ள பிலாங்குப்பம், குமுளி ஆகிய பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சிறுநகர் கிராமத்துக்கு மதுராந்தகம்-புதுச்சேரி சாலையை ஒட்டி நுகும்பல் கிராமம், பெரியகளக்காடி வழியாகவும், அச்சிறுப்பாக்கம் இந்தலூர், கயப்பாக்கம் வழியாகவும் செல்ல முடியும்.
இப் பகுதியிலுள்ள மாணவ-மாணவிகள் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சூனாம்பேடு ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.
தினமும் இவர்கள் கிராமத்திலிருந்து நெடுஞ்சாலை வரை சுமார் 2.5 கி.மீ. நடந்து சென்று, பின்னர் பேருந்துகளைப் பிடித்து, பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
மாலையில், பள்ளிகளில் இருந்து வீடு திரும்பும் மாணவிகள் தனியாக நடந்து செல்லும்போது, பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தீண்டும் அபாயம் உள்ளது. மேலும், மாணவிகள் தனியாக செல்லும்போது அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
இப்பகுதி மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு, அச்சிறுப்பாக்கம், சூனாம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை செய்யவும், நோயாளிகள் சிகிச்சை பெறவும் நீண்ட தூரம் நடந்து சென்று, பின்னரே பேருந்துகளில் ஏறிச் செல்ல முடியும். பெரியகளக்காடி-சிறுநகர் செல்லும் சாலை மிகவும் குறுகிய, ஒத்தையடி சாலையாக உள்ளது. இச்சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் கடந்த 25 ஆண்டு காலமாக சிறுநகருக்கு பேருந்து வசதி கிடைக்கப்பெறவில்லை.
இப்பகுதியில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் உள்ள தெரு மின் விளக்குகள் ஒன்று கூட எரியவில்லை. மேலும், ஏரிக்கரை பெரிய கிணறு, மாரியம்மன் 2-ஆவது தெருவில் உள்ள கிணறுகளின் மேல்பகுதி மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளன. இதனால் காற்றில் பறந்து வரும் குப்பை கூளங்களும், மரங்களின் இலைகளும் விழுந்து குடிநீர் மாசடைந்து வருகிறது.
2011-12-இல் ரூ.1.40 லட்சம் மதிப்பீட்டில் சிறுநகர் காலனியில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை சுய உதவிக்குழுவினர் பராமரிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த வளாகத்தில் உள்ள கழிப்றையில் நீர், மின் விளக்கு என எந்த வசதியும் இல்லாமல் காட்சி பொருளாக சுகாதார வளாக கட்டடம் உள்ளது. இதனால், இப்பகுதியினர் ஏரிக்கரை, திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். இதனால், சுற்றுப்புற சுகாதாரம் சீர்கெட்டுள்ளது.
கடந்த 1998-1999 இல் செய்யூர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. இக்கட்டடத்தில் மின்சாரம், பாதுகாப்பு அறை, மின்விசிறி போன்ற வசதிகள் இன்றி உள்ளது. இதனால் சிறுநகர் பகுதி மக்கள் தங்களது வீட்டு சுப நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழா போன்ற நிகழ்ச்சிகளை இந்த சமுதாயக் கூடத்தில் நடத்த முடியாத நிலை உள்ளது.

Story image

எதிர்பார்ப்பு...
மேற்கண்ட அனைத்து குறைபாடுகளையும் களையக் கோரி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பினர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இனியாவது சிறுநகர் மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்திசெய்து தருமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.