ஆரியபெரும்பாக்கம் அருகே காரில் சிக்கிய 7 வயது சிறுவன் சுமார் 2 மணி நேரம் போராடி மீட்கப்பட்டார்.
காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் ஆரியம்பெரும்பாக்கம் அருகே உள்ள ஆட்டோ நகரில் பெயிண்டராகப் பணிபுரிந்து வருகிறார்.
அவரும், அவரது மகன் சத்தியப்பிரியன், உறவினர் கார்த்திக் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆட்டோ நகரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி காரில் வந்துகொண்டிருந்தனர். சென்னை-பெங்களூரு சாலையில் ஆரியபெரும்பாக்கம் அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு, எதிர்திசையில் வந்துகொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில், காரை ஓட்டி வந்த கார்த்திக், சிவலிங்கம் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். காரின் முன்பக்க இடது இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன் சத்தியப்பிரியன் காயங்களுடன் காரின் இடிபாடுகளில் சிக்கினார். இதுகுறித்த தகவலின்பேரில், போலீஸாரும், ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்களும் அவ்விடத்துக்கு வந்தனர்.
எனினும், காரின் இடிபாடுகளில் சிறுவன் சிக்கிக் கொண்டிருந்ததால் ஆம்புலன்ஸ் ஊழியர்களால் அவரை மீட்க முடியவில்லை. எனவே, மருத்துவர் உதவியுடன் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
இதனிடையே, இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறை எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானியும், தீயணைப்புத் துறையினரும் நிகழ்விடத்துக்கு விரைந்தனர். அதைத் தொடர்ந்து, கிரேன் உதவியுடன் சரக்கு வாகனத்துக்குள் சிக்கிய காரைப் பிரித்தனர். இடிபாடுகளில் சிக்கிய சிறுவனை சுமார் 2 மணி நேரம் போராடி மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.