மானாம்பதியில் தூய்மைக் கணக்கெடுப்புப் பணி தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரை அடுத்த மானாம்பதி கிராமத்தில் தூய்மைக் கணக்கெடுப்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பேரணியில் மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரிச்சாமி, ராஜ்குமார் ஆகியோர் தலைமை வகித்து பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், ஊராட்சி செயலாளர் கன்னியப்பன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
மத்திய அரசு கிராமப்புற மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. இதில் தனிநபர் இல்லக் கழிவறை, திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை திட்டம், ஊராட்சி சுற்றுச் சூழல் மேலாண்மை உள்ளிட்ட பல திட்டங்கள் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்கள் கிராம மக்களிடம் சென்றடைகின்றனவா என்பதை உறுதிசெய்யும் நோக்கில் கிராமங்களில் கழிப்பறைப் பயன்பாடு, திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலை, பொது இடங்களான பள்ளிகள், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமச் சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்களிலுள்ள சுகாதார நிலைமை அறியப்படுகிறது. அதேபோல், பொதுமக்களிடம் தூய்மை இந்தியா இயக்கச் செயல்பாடுகள் குறித்து கிராமக் கூட்டங்கள், தனிநபர் கருத்து கேட்பு ஆகிய காரணிகளின் அடிப்படையில் தகவல் சேகரிக்கப்படவுள்ளது. அதன்பேரில், சிறந்த மாவட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி தில்லியில் பிரதமர் தலைமையில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இப்பேரணியில், தன் சுத்தம் பேணிக் காத்தல், சுற்றுப்புறத் தூய்மை, மரம் வளர்த்தல், மழை நீரை சேகரித்தல், குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குதல், திறந்தவெளியில் மலம் கழித்தால் ஏற்படும் தீமைகள், தனிநபர் இல்லக் கழிவறை அமைத்தலின் அவசியம் உள்ளிட்டவை குறித்த பதாகைகளை ஏந்தியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், பொது மக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




