/

மின்பாதைப் பணிகள் முடிந்தும் திருமால்பூரிலிருந்து அரக்கோணம் வரை ரயில்களை நீட்டிக்காத ரயில்வே நிர்வாகம்

பல்வேறு காரணங்களால் நீண்ட ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த அரக்கோணம் - தக்கோலம் ரயில் மின்பாதைப் பணிகள் முடிவடைந்த பிறகும்

News image
Updated On :16 மே 2019, 10:01 pm

எஸ்.சபேஷ்



பல்வேறு காரணங்களால் நீண்ட ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த அரக்கோணம் - தக்கோலம் ரயில் மின்பாதைப் பணிகள் முடிவடைந்த பிறகும் எவ்விதக் காரணமும் இல்லாமல் திருமால்பூரில் இருந்து அரக்கோணம் வரை ரயில்களை நீட்டிக்காமல் ரயில்வே நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது.
அரக்கோணம்- செங்கல்பட்டு குறுகிய ரயில் பாதையாக இருந்து அகலப்பாதையாக மாற்றப்பட்டபோது அரக்கோணம் - தக்கோலம் இடையே பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்பட்டன. அதன்பின் ஒரு வழியாக இந்த வழித்தடம் அகலப்பாதையாக மாற்றப்பட்டது. இந்த வழித்தடத்தை மின்மயமாக்குவதற்கு அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளம் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி எதிர்ப்புத் தெரிவித்தது.
இதனால் நீண்ட காலமாக இப்பாதை மின் மயமாக்கப்படவில்லை. இதன் பாதுகாப்புத் துறையின் ஒப்புதலுக்குப் பின் மாற்று வழித்தடத்தில் அப்பாதை மின்மயமாக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சுற்றுவட்டப்பாதையில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளூர் வழியாக மீண்டும் கடற்கரைக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கு எதிரான வழித்தடத்தில் மற்றொரு ரயில் இயக்கப்படுகிறது. நாட்டிலேயே அதிகத் தொலைவு கொண்ட சுற்றுவட்டப்பாதையாக இது திகழ்கிறது.
  இந்த ரயில்கள் இயக்கப்பட்ட போதே சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருமால்பூர் வரை செல்லும் மின்சார ரயில்கள் அரக்கோணம் வரை நீட்டிக்கப்படும் என அறிவித்து அதற்கான கால அட்டவணையையும் வெளியிட்டது. 
இந்த அறிவிப்பால் இப்பாதையில் தினமும் பயணம் செய்யும் நேரம் குறைவதோடு பணமும் மிச்சமாகும் என்று பயணிகள் மகிழ்ச்சிக்குள்ளாகினர்.
ஆனால் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைக் காரணம் காட்டி இப்பாதையில் ரயில்கள் இயக்கத்துவங்கி ஒரு மாதமாகியும், திருமால்பூர் ரயில்கள் அரக்கோணம் வரை நீட்டிக்கப்படவில்லை. 
இது தொடர்பாக அரக்கோணம் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் நைனா மாசிலாமணி தினமணி நிருபரிடம் வியாழக்கிழமை கூறியது:
மிக நீண்ட காலப் போராட்டத்துக்குப் பின்பு நாட்டிலேயே அதிகத் தொலைவு செல்லும் சுற்றுவட்டப்பாதை ரயில் அரக்கோணம் வழியாகச் செல்கிறது. 
இதற்கும் திருமால்பூரில் இருந்து அரக்கோணம் வரை ரயில்களை நீட்டிப்புச் செய்யவும் ஒரே நேரத்தில் ஆணை பெறப்பட்டது.
 மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன் இதற்கான உத்தரவு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டது. தேர்தல் நடத்தை நெறிமுறைகளை அமலில் இருக்கும்போது சுற்றுவட்டப்பாதை ரயில் இயக்கப்பட்டது. 
ஆனால் திருமால்பூரில் இருந்து அரக்கோணம் வரை ரயில்களை நீட்டிக்க ஏன் அதிகாரிகள் தயங்குகின்றனர் என்பது தெரியவில்லை என்றார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இந்த சேவையை துவக்கத் தடையாக இருக்கும் காரணங்களைக் களைந்து ரயில் சேவை  தொடங்கப்பட்டால் ரயில்வே துறைக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதுடன் பயணிகளுக்கும் பல்வேறு விதங்களில் உதவியாக இருக்கும். முடிவு ரயில்வே துறை அதிகாரிகளிடம்..!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.