பெற்றோர்களுக்கு புத்தாடை எடுத்த மாணவ, மாணவியர்: வாய்ப்பளித்த தனியார் பள்ளி

தீபாவளி என்றாலே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு புத்தாடைகள் எடுத்துக் கொடுப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இதற்கு மாற்றாக குழந்தைகள் பெற்றோர்களுக்கு புத்தாடைகள் எடுத்துக் கொடுத்த
பெற்றோர்களுக்கு புத்தாடை எடுத்த மாணவ, மாணவியர்: வாய்ப்பளித்த தனியார் பள்ளி
Updated on
2 min read


தீபாவளி என்றாலே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு புத்தாடைகள் எடுத்துக் கொடுப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இதற்கு மாற்றாக குழந்தைகள் பெற்றோர்களுக்கு புத்தாடைகள் எடுத்துக் கொடுத்த நெகிழ்ச்சியான 
சம்பவம் செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.
இந்தியா முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளி. ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என தனிச் சிறப்பு உண்டு. எந்தப் பாகுபாடுகள் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடி மகிழ்வர்.
பொதுவாக தீபாவளி வந்துவிட்டாலே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு புத்தாடைகள் எடுத்துக் கொடுப்பது வழக்கம்.
 ஆனால் இதற்கு மாற்றாக காஞ்சிபுரம் நகர் ஓரிக்கையில் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர் 300-க்கும் மேற்பட்டோர் தங்களது பெற்றோர்களுக்கு வேட்டி, சட்டை, சேலைகளை வாங்கிக் கொடுத்துள்ளனர். 
இப்பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஒரு தலைவர் நியமிக்கப்பட்டனர். சிறப்பாகச் செயல்படுவோருக்கு மாதந்தோறும் பள்ளி நிர்வாகம் ஊக்கத் தொகை வழங்குகிறது. இத்தொகை ஆண்டு முடிவில் ரொக்கமாக வழங்கப்பட்டு வந்தது. 
இந்த ஆண்டு பள்ளி நிர்வாகத்தின் ஆலோசனையின்படியும், மாணவர்களின் விருப்பப்படியும் பெற்றோர்களுக்கு தீபாவளிக்கு புத்தாடைகள் எடுத்துக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மாணவர்கள் ஊக்கத் தொகையில் சேமிப்புக்கு ஏற்றவாறு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஜவுளிக்கடைக்கு செவ்வாய்க்கிழமை சென்று ஆடைகளைத் தேர்வு செய்தனர். 
இதுகுறித்து அப்பள்ளி மாணவர் டி.தீபக்கிருஷ்ணன் கூறியது:
நான் 10-ஆம் வகுப்புக்குத் தலைவராக இருக்கிறேன். 
மாதந்தோறும் பள்ளி நிர்வாகம் எனக்கு வழங்கிய ஊக்கத் தொகையின் சேமிப்பு பணம் மொத்தம் ரூ. 1,050. அதில் ரூ. 290-க்கு வேட்டி, ரூ.725-க்கு சட்டை என ரூ.1,015-க்கு எனது தந்தைக்கு புத்தாடை வாங்கினேன். என் தந்தை காஞ்சிபுரம் மாவட்ட தொலை தொடர்புத் துறையில் துணைப் பொது மேலாளராகவும், தாயார் கல்லூரிப் பேராசிரியராகவும் உள்ளனர்.
 தீபாவளிக்கு உங்களுக்கு புத்தாடை வாங்கப் போகிறேன், சட்டையின் அளவு என்ன என்று என் தந்தையிடம் கேட்டபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் எடுத்த புத்தாடையை எனது தந்தையிடம் கொடுத்து தீபாவளியன்று ஆசி பெறுவேன் என்று டி.தீபக்கிருஷ்ணன் கூறினார்.
பள்ளித் தாளாளர் ப.ரமேஷ் கூறியது:
நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் வகுப்புத் தலைவர்களாக மாணவர்கள் நியமிக்கப்பட்டனர். 
சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்கு மட்டும் மாதந்தோறும் ஊக்கத் தொகை வழங்குகிறோம். இத்தொகை ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். ஆண்டுதோறும் சேமிப்புத் தொகையை அவரவர் கையில் கொடுக்கப்படும். 
இந்த ஆண்டு முதல் முயற்சியாக பெற்றோருக்கு புத்தாடை எடுத்துக் கொடுக்கலாமா என்று மாணவர்களிடம் கேட்டதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. 
எனவே, இந்த ஆண்டு மாணவத் தலைவர்கள் 190 பேர், மாணவியரில் 140 பேர் என மொத்தம் 330 பேர், தங்களது பெற்றோர்களுக்கு புத்தாடைகளைத் தேர்வு செய்து வாங்கியுள்ளனர்.
இதைப் பார்த்த மற்ற மாணவர்களும் நாமும் வகுப்பறைத் தலைவர்களாக வர வேண்டும் என்றும் விரும்புகின்றனர். 
புத்தாடைகள் வாங்கிய மாணவர்கள் தீபாவளியன்று அவற்றை பெற்றோர்களிடம் கொடுத்து ஆசி பெற உள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com