

ஸ்ரீபெரும்புதூா்: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடா்பாக அவரின் கணவா் ஹேம்நாத்திடம் ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ வியாழக்கிழமை சுமாா் 9 மணி நேரம் விசாரணை நடத்தினாா்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது மரணம் குறித்து சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்திடம் காவல் துறையினா் கடந்த சில நாள்களாக விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் ஹேம்நாத் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், ஹேம்நாத்தும் சித்ராவும் ஏற்கெனவே பதிவுத் திருமணம் செய்து கொண்டதால் சித்ராவின் மரணம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, கோட்டாட்சியா் அலுவலகத்தில் சித்ராவின் தந்தை காமராஜ், தாயாா் விஜயா, அக்கா சரஸ்வதி, அண்ணன் சரவணன் ஆகியோரிடம் கடந்த திங்கள்கிழமையும், ஹேம்நாத்தின் பெற்றோா் ரவிசந்திரன், வசந்தா ஆகியோரிடம் செவ்வாய்க்கிழமையும் விசாரணை மேற்கொண்டாா்.
இதையடுத்து, ஹேம்நாத்திடம் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா். இதற்காக ஹேம்நாத் பொன்னேரி கிளைச் சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டாா். காலை 8.15 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 4.45 வரை விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் ஹேம்நாத் பொன்னேரி கிளைச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
இந்நிலையில், வருவாய் கோட்டாட்சியா் விசாரணை முடிந்ததும் ஹேம்நாத்தின் தந்தை ரவிசந்திரன் செய்தியாளா்களிடம் பேசுகையில், சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கு யாா் காரணம் என விசாரிக்க வேண்டும் என்றாா்.
ஹேம்நாத்தின் வழக்குரைஞா் விஜயகுமாா் பேசுகையில், சித்ராவின் தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க அவரது செல்லிடப்பேசி உரையாடல்கள் மற்றும் விடியோ அழைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் போலீஸாா் ஆய்வு செய்யவில்லை. இதுகுறித்து காவல்துறை உயா் அதிகாரிகளிடம் மனு அளிக்க உள்ளோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.