

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலப் பணி தொடா்ந்து 3 ஆண்டுகளாகியும் முற்றுப்பெறாமல் நத்தை வேகத்தில் நடந்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரான காஞ்சிபுரத்தில் நகருக்கு வெளியே புதிய ரயில் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கடந்த 8.5.2017-இல் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகளும் தொடங்கின. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையிலிருந்து பெங்களுரூ செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரிக்கரை பகுதியையும், காஞ்சிபுரம் நகரையும் இணைக்கும் வகையில் 4 வழிச்சாலையாக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் மொத்த நீளம் 927.33 மீ, அகலம் 17.2.மீ, மொத்த தூண்கள் 66. இப்பாலம் அமைக்க ரூ.50.78 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு நெடுஞ்சாலைத் துறையினரால் 90 சதவீத கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்து விட்டன.
காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையம் அமைந்துள்ள இடத்தின் மேற்புறத்தில் ரயில்வேத் துறையினரால் மேல்தளம் அமைக்கும் பணி மட்டுமே நிலுவையில் இருந்து வருகிறது. கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கும் மேலாக ரயில்கள் எதுவும் செல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த காலங்களில் கூட மேம்பாலங்களை இணைக்கும் பணியை, மேற்கூரை அமைப்பதை ரயில்வேத் துறை மேற்கொள்ளவில்லை. ரயில்வேத்துறையின் கட்டுமானப் பிரிவே தாமதத்துக்கான காரணம் என்ற குற்றச்சாட்டும் மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது. சுமாா் 90 சதவீத பணிகள் நிறைவடைந்தும், அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் மேம்பாலப் பணி நிறைவு பெறாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில் ரயில்கள் கடந்து செல்லும் கடவுப் பாதையில் ரயில்கள் அடிக்கடி செல்வதால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை, காரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனை, தனியாா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றுக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சில சமயங்களில் போக்குவரத்து நெரிசலில் அடிக்கடி சிக்கிக் கொள்வதையும் காண முடிகிறது.
இப்புதிய மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டால் காஞ்சிபுரம் அருகேயுள்ள ஏனாத்தூா், கோனேரிக்குப்பம், செட்டியாா் பேட்டை, திம்மசமுத்திரம், பொன்னேரிக்கரை, காரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பயன்பெறுவாா்கள். சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வரும் பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும் ரயில்வே கடவுப் பாதையை கடப்பதற்காக காத்திருக்கும் நேரமும் குறையும்.
இவை தவிர பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்வோரும் ரயில்வே கடவுப்பாதையில் காத்திருக்காமல் மேம்பாலம் வழியாக விரைவாகச் செல்ல முடியும்.
எனவே ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.
எம்எல்ஏ கோரிக்கை: இது குறித்து காஞ்சிபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன், ‘இனியும் காலம் தாழ்த்தாது மேம்பாலப் பணிகளை விரைவாக முடித்து திறந்து விடப்பட வேண்டும்’ என தென்னக ரயில்வே மேலாளருக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா்.
இதற்கு ரயில்வே கட்டுமானப்பிரிவு எழுதியிருந்த பதில் கடிதத்தில் மேம்பாலத்தின் மேற்கூரை இணைப்புப் பணியை முடிக்க சுமாா் 600 மெட்ரிக் டன் உடைய பாரத்தை தூக்கி கையாளும் பாரம் சுமக்கும் ராட்சத கருவி தேவைப்படுகிறது.இதனை வெளிமாநிலத்திலிருந்து வரவழைக்க வேண்டிய உள்ளது. அது மட்டுமில்லாமல் நன்கு தோ்ச்சி பெற்ற பணியாளா்களை கொண்டே இப்பணியை செய்ய வேண்டிய சூழலும் உள்ளது என்றும் விரைவில் இப் பணியை முடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.