காஞ்சிபுரம் நெசவாளர்கள் 5 பேருக்கு தேசிய விருதுகள்: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் அறிவிப்பு

சிறந்த முறையில் பட்டுச்சேலையை வடிவமைத்தமைக்காக காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளர்கள் 5 பேருக்கு தேசிய விருதுகளை மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
சந்த்கபீர் விருது பெற்றமைக்கான அரசு அறிவிப்பு நகலை சிறந்த நெசவாளர் பி.கிருஷ்ண மூர்த்தியிடம் வழங்கும் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையத்தின் உதவி இயக்குநர் ஆர்.சசிகலா
சந்த்கபீர் விருது பெற்றமைக்கான அரசு அறிவிப்பு நகலை சிறந்த நெசவாளர் பி.கிருஷ்ண மூர்த்தியிடம் வழங்கும் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையத்தின் உதவி இயக்குநர் ஆர்.சசிகலா
Published on
Updated on
1 min read

சிறந்த முறையில் பட்டுச்சேலையை வடிவமைத்தமைக்காக காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளர்கள் 5 பேருக்கு தேசிய விருதுகளை மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோயில் தெருவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நெசவாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையம் ஆண்டுதோறும் பட்டுச்சேலைகளில் சிறந்த வடிவமைப்பாளர்களை தேர்வு செய்து மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை செய்கிறது.

கடந்த 2018ஆம் ஆண்டுக்கான நெசவாளர்களுக்கே உரிய மத்திய அரசின் உயரிய விருதான சந்த்கபீர் விருதும், 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருது 4 நெசவாளர்களுக்கும் கிடைத்துள்ளது. இதன் மூலம் சிறந்த நெசவாளருக்கான தேசிய விருதுகளை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 5 பேர் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை பாராட்டிய பின்னர் பேசிய காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையத்தின் உதவி இயக்குநர் ஆர்.சசிகலா, “நெசவாளர்களுக்கே உரிய மத்திய அரசின் மிக உயர்ந்த விருதான சந்த் கபீர் விருது இந்த ஆண்டு காஞ்சிபுரத்துக்கு கிடைத்திருக்கிறது. கடந்த 2018ஆம் ஆண்டுக்கான இந்த விருதை காஞ்சிபுரம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பி.கிருஷ்ணமூர்த்தி (61) பெறவுள்ளார். இந்த விருதுடன் ஒரு தங்க நாணயம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள காஷ்மீர் சால்வை, பெயர் பொறிக்கப்பட்ட தாமரப் பத்திரம், ரொக்கம் ரூ.3 லட்சம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் ஆகியனவும் வழங்கப்படும்.

சிறந்த நெசவாளர் என்ற முறையில் இவ்விருது கிடைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளிடமிருந்து ஏற்கெனவே விருது பெற்றிருந்தால் மட்டுமே இந்த உயரிய விருதுக்கு விண்ணப்பிக்கவே முடியும். இவரைத் தவிர மேலும் 4 பேர் தரமான கோர்வை ரக பட்டுச்சேலை வடிவமைத்தமைக்காக சிறந்த நெசவாளர்களாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது பெறுகிறார்கள்.

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த காமாட்சி ஹரி, காஞ்சிபுரம் தர்மலிங்க நகரைச் சேர்ந்த சரளா கணபதி ஆகிய இருவரும் தம்பதியராக சேர்ந்து சிறந்த பட்டுப்புடவையை வடிவமைத்தமைக்காக வழங்கப்படவுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம் கணிகண்டீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்த ருக்மணி கண்ணியவேல் (49) காஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ள தெருவைச் சேர்ந்த ஏ.ஹரி (54) உட்பட இவர்கள் 4 பேரும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரம் மட்டுமே சிறந்த நெசவாளர்களுக்கான 5 தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக விருது வழங்கப்படுவது தாமதமாகி இருந்தது. இவ்விருதுகள் புது தில்லியில் விரைவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட இருப்பதாகவும் ஆர்.சசிகலா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com