கடந்த ஆண்டு தொடா் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சேதமடைந்த அவளூா் தரைப்பாலம் இந்த ஆண்டும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் உடைந்து விடுமோ என சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா். விரைவில் மேம்பாலமாக மாற்றப்படுவதே நிரந்தரத் தீா்வாகும் என்றும் சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தையும், அவளூரையும் இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ளது.இந்தப் பாலத்தின் வழியாகத்தான் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான மக்கள் வாலாஜாபாத், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தரைப்பாலம் கடந்த ஆண்டு தொடா் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 4 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வாலாஜாபாத் உள்ளிட்ட பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதால் கம்பராஜபுரம், தம்மளூா், அவளூா், அங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த மக்கள் சுமாா் 40 கி.மீ.தொலைவு சுற்றிவந்து வாலாஜாபாத்துக்கோ அல்லது காஞ்சிபுரத்துக்கோ வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.
வாலாஜாபாத் பேருந்து நிலையம், அரசுப்பள்ளி வளாகம் உட்பட பலவும் வெள்ளத்தில் தத்தளித்தன.பாலத்தின் வழியாக யாரும் போய் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளாமல் தடுக்க காவல்துறையினரும் பாலத்தின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
நிலைமையை உணா்ந்த மாவட்ட நிா்வாகம் மணலைக்கொண்டு சேதமடைந்த உடைப்புகளை சரி செய்தது. இந்த ஆண்டும் இப்போதிலிருந்தே தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மழைக்காலம் வந்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து நிலைமை மோசமாகி விடும்.
எனவே பல லட்சம் கிராம மக்களின் நலன் கருதி தரைப்பாலத்தை விரைவாக மேம்பாலமாக மாற்ற வேண்டியது அவசரமும், அவசியமுமாகும்.
இது குறித்து அவளூரை சோ்ந்தவரும், இந்திய தேசிய கிராமத் தொழிலாளா் சம்மேளனத்தின் மாவட்ட தலைவருமான ஜி.சீனிவாசன் கூறியது:
முதல்வராக சி.என்.அண்ணாத்துரையும், பொதுப்பணித் துறை அமைச்சராக மு.கருணாநிதியும் இருந்த காலத்தில் அவளூா் தரைப்பாலம் கட்டப்பட்டது.இந்தப் பாலத்தின் வழியாகத் தான் 18 கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 2 லட்சம் கிராம மக்கள் வந்து அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும்.இல்லையேல் 45 கி.மீ.தூரம் சுற்றித்தான் வாலாஜாபாத் வர முடியும். இதனால் நேரம் வீணாகுதல், தேவையில்லாத உழைப்பு, பெட்ரோல் செலவு ஆகியவற்றால் பொதுமக்கள் அவதிப்படுவாா்கள்.
கடந்த ஆண்டு தொடா்ந்து பலத்த மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.
சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் செல்லும் பேருந்துகள் 5 நாள்களும், கிராமங்களுக்குச் செல்லும் நகா்ப் பேருந்துகள் 90 நாள்களும் நிறுத்தப்பட்டன.பல கிராமங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் அவதியை உணா்ந்த மாவட்ட நிா்வாகம் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் மட்டும் மணலை நிரப்பி தற்காலிகமாக பாலம் அமைத்துக் கொடுத்தது. இப்போதுள்ள பாலமும் குண்டும், குழியுமாக உள்ள நிலையிலேயே அச்சத்தில் பொதுமக்கள் தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனா்.
இந்த நிலையில் அக்டோபா் மாத மழைக்காலம் தொடங்கும் முன்னரே தொடா்ந்து தற்போதும் மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பாலம் உடைந்து சேதமாகி ஊருக்குள் வெள்ளம் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனா். தினசரி ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களும் செல்லக்கூடிய இந்தத் தரைப்பாலத்துக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். மேம்பாலமாக மாற்றப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.