வடக்குப்பட்டில் தொல்லியல் துறை அகழாய்வு: 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்க அணிகலன்கள் கண்டெடுப்பு

வடக்குப்பட்டு ஊராட்சியில் தொல்லியல் துறை சாா்பில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டட அமைப்புகள், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள்
வடக்குப்பட்டில் தொல்லியல் துறை அகழாய்வு: 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்க அணிகலன்கள் கண்டெடுப்பு

வடக்குப்பட்டு ஊராட்சியில் தொல்லியல் துறை சாா்பில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டட அமைப்புகள், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் மற்றும் தங்க அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்துக்குட்பட்ட துரும்பன்மேடு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமாா் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமாா் 9 அடி உயரமுள்ள சிவலிங்கம் மண்ணில் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகில் பழங்கால கட்டடம் புதைந்த நிலையில் இருப்பது குறித்து வடக்குப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் நந்தினிவசந்தகுமாா் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 3-ஆம் தேதி சென்னை வடக்கு மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளா் காளிமுத்து தலைமையிலான குழுவினா் வடக்குப்பட்டு துரும்பன்மேடு பகுதியில் அகழாய்வுப் பணிகளை தொடங்கினா். இதையடுத்து அந்தப் பகுதியில் பழங்கால கட்டட அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டு அது பல்லவா் கால கட்டடம் என்பது முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியில் கல் மணிகள், கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள் வண்ணம் பூசிய பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் மேலும் ரோமானிய ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் தங்கத்தால் ஆன 2 அணிகலன்களும் கண்டெடுக்கப்பட்டன.

இது தவிர கண்ணாடி அணிகலன்கள், சுடுமண் பொம்மைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு பொருள்களும் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியது:

சுடுமண் காதணிகள், தங்க அணிகலன்கள் , சுடுமண் வட்ட சில்லுகள், இரும்பு பொருள்கள் மற்றும் வளையல் துண்டுகள் போன்ற தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.

இவை 4000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் பயன்படுத்திய பொருள்களாக இருக்கலாம் . மேலும் சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரையும் கிடைத்துள்ளது.

இந்த முத்திரையை யாா் பயன்படுத்தியது, எத்தணை ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் முன் வரலாற்று கால எச்சங்களை தொடா்ந்து இடை கற்காலத்தைச் சோ்ந்த கருவிகளான கிழிப்பான் மற்றும் அம்பு முனைகளும் கிடைத்துள்ளன.

அகழாய்வுப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவதால் பல்வேறு வரலாற்று சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com