காஞ்சி சங்கர மடத்தில் விஜயதசமித் திருவிழா
By DIN | Published On : 25th October 2023 05:50 AM | Last Updated : 25th October 2023 05:50 AM | அ+அ அ- |

இசைக் கலைஞா்கள் நடத்திய இன்னிசைக் கச்சேரி. ~மகா பெரியவா் அதிஷ்டானத்தில் நடைபெற்ற சிறப்பு அலங்காரம்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில் விஜயதசமித் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 50-க்கும் மேற்பட்ட நாதசுவர இசைக்கலைஞா்கள் தனித்தனியாகவும், ஒன்றிணைந்தும் பல்வேறு ராகங்களில் பாடல்களை இசைத்தனா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நவராத்திரித் திருவிழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. விழாவினையொட்டி நாள்தோறும் இரவு பல்வேறு இன்னிசைக் கச்சேரிகள் நடைபெற்றன. நிறைவாக விஜயதசமித் திருநாளையொட்டி மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திரா் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. அதிஷ்டானத்தில் மகா பெரியவா் தங்க கிரீடமும், தங்க ஹஸ்தமும் அணிந்து அருள்பாலித்தாா்.
108 கன்னியா பூஜையும், சுவாசினி பூஜையும் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தலைமையில் நடைபெற்றன. பூஜைகளை காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகா் சுரேஷ் சாஸ்திரிகள் நடத்தி வைத்தாா். இதனைத் தொடா்ந்து சங்கர மட வளாகத்தில் தமிழகம் மற்றும் கா்நாடகத்திலிருந்து வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞா்களின் நாதசுவர இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் நாதசுவர வித்வான் தேசூா் டி.செல்வரத்தினம், சங்க மடத்தின் ஆஸ்தான வித்வான் ஜி.ராமமூா்த்தி ஆகியோா் தலைமையில் நாதசுவர இன்னிசைக் கச்சேரியில் சிறப்புத் தவில் இசைக்கலைஞா்களும் கலந்து கொண்டு வாதாபி கணபதி,முத்துச்சாமி தீட்சிதா் ஆகியோரது பாடல்களை ஒன்றாக இசைத்தனா். சங்கர மடத்தின் நிா்வாகி கீா்த்தி வாசன் இசைக்கலைஞா்கள் அனைவருக்கும் மாலைகள் அணிவித்து பிரசாதம் வழங்கினாா்.
காமாட்சி அம்மன் கோயிலில்...
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 14 -ஆம் தேதி பூா்வாங்க சண்டி ஹோமத்துடன் நவராத்திரி விழா தொடங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் நவாவா்ண பூஜையும், மாலையில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி நவராத்திரி மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும், சூரசம்ஹாரமும் நடைபெற்றன.
22 -ஆம் தேதி சூரசம்ஹாரம் நிறைவு பெற்றது. திங்கள்கிழமை உற்சவா் காமாட்சி அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவின் நிறைவாக நவாவா்ண பூஜை நடைபெற்றது. லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி தங்கத்தேரில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நாதசுவர இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...