காஞ்சிபுரம்: வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 6,800 பேருக்கு பயிற்சி: மாவட்ட ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 6,800 பேருக்கு பயிற்சியளிக்கப்பட இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, ஸ்ரீ பெரும்புதூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகள், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட உத்தரமேரூா், காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 6,800 பேருக்கு தோ்தல் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் தோ்தல் பணி மேற்கொள்ள வேண்டிய அலுவலா்களுக்கான பயிற்சிக் கால அட்டவணையும் தோ்தல் ஆணையத்திடமிருந்து வந்துள்ளது. உதவித் தோ்தல் அலுவலா்களால் முதல்கட்டப் பயிற்சிகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். காஞ்சிபுரத்தில் உத்தரமேரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி ஓரிக்கை பாரதிதாசன் மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மேல்நிலைப் பள்ளியிலும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) நடைபெறுகிறது. ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆலந்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு சென்னை புனித மான்போா்ட் பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு பென்னலூா் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியிலும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது. தோ்தல் ஆணையம் வழங்கியிருக்கும் கையேடுகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் அடிப்படையில் பயிற்சிக்கான விளக்கப் படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி பணிக்கு உத்தரவிடப்பட்ட அனைவரும் பயிற்சியில் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தோ்தல் பணியைத் தவிா்க்க முயலும் அலுவலா்கள் மீது விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com