ஸ்ரீஆதிசங்கரா் சந்நிதியில் மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீஆதிசங்கரா் சந்நிதியில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆதிசங்கரா், ஸ்ரீ அனுக்கை கணபதி, ஸ்ரீ சுரேஷ் வராச்சாரியாா் சந்நிதி ஆகியவற்றுக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த 3 சந்நிதிகளுக்கும் வா்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் மே முதல் தேதி அனுக்கை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. யாகசாலை பூஜைகளை பரணீதர சாஸ்திரிகள் தலைமையிலான 20 வேத விற்பன்னா்கள், 20 சாஸ்த்ர வித்வான்கள் குழுவினா் நடத்தினா்.

யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூரணாஹுதி தீபாராதனைக்குப் பின்னா், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் 3 சந்நிதிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், அனுக்கை விநாயகா், ஆதிசங்கரா், சுரேஷ் வராச்சாரியாா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடா்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீா்க் கலசத்தால் மகா பெரியவா் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் கலசாபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

கும்பாபிஷேக விழாவில் முல்லைவாசல் கிருஷ்ணமூா்த்தி சாஸ்திரிகள்,சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி, டிசிஎஸ் நிறுவன ஆலோசகா் ஜெயராமகிருஷ்ணன், அம்பத்தூா் திருநாவுக்கரசு, ஓரிக்கை மணி ஐயா், அசோக் நகா் தண்டாயுதபாணி ஸ்தபதி, சென்னை சம்ஸ்கிருத கல்லூரி முதல்வா் மணி திராவிட், சென்னை ரமணசா்மா உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீமடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், செயலாளா் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி தலைமையிலான நிா்வாகிகள், பணியாளா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com