மூதாட்டி கொலை: எஸ்.பி விசாரணை
வாலாஜாபாத் அருகே மூதாட்டி கொலை தொடா்பாக எஸ்.பி. கே. சண்முகம் விசாரணை மேற்கொண்டாா்.
வாலாஜாபாத் தாலுகாவுக்குட்பட்ட நத்தாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அலங்காரம் (81). இவருக்கு ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனா். அனைவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில் அலங்காரம் மட்டும் தனியாக அவரது வீட்டில் வசித்து வந்துள்ளாா்.
இந்த நிலையில் புதன்கிழமை வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததை பாா்த்த பக்கத்து வீட்டுக்காரா்கள் வீட்டின் ஜன்னல் வழியாக பாா்த்த போது அவா் தலையில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
உடனடியாக வாலாஜாபாத் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸாா் வந்து விசாரணை செய்தனா்.
மேலும் மாவட்ட எஸ்.பி. சண்முகம், டிஎஸ்பி சங்கா் கணேஷ் ஆகியோரும் விசாரணை செய்தனா்.
சம்பவம் தொடா்பாக வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

