புத்தாண்டு: ஸ்ரீராஜகுபேரா் கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள்
காஞ்சிபுரம் அருகே வெள்ளைகேட் ராஜகுபேரா் கோயிலில் புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை பக்தா்கள் சுலபமாக தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிா்வாக அறங்காவலா் ராஜகுபேர சித்தா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியது: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனவிருத்தி தரும் ஸ்ரீராஜ குபேரா் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புத்தாண்டையொட்டி அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. தங்கக் கவச அலங்காரத்தில் மூலவா் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். பக்தா்கள் பில்லாபோங் ஸ்கூல் வழியாக உள்ளே வந்து தரிசனம் செய்த பின்னா் ஆலயத்தின் சந்நிதி தெரு வழியாக வெளியே செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தா்கள் இடையூறின்றி சுவாமியை தரிசிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும்,புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தாா்.

