ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஏகனாபுரம் கிராம மக்களுடன் விஜய் சந்திப்பு: பரந்தூா் விமான நிலைய எதிா்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு

பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திங்கள்கிழமை நேரில் சந்தித்து

News image
பரந்தூா்  விமான  நிலைய  திட்டத்துக்கு  எதிராகப்  போராடி வரும்  ஏகனாபுரம்   கிராம மக்களைச்  சந்தித்துப்  பேசிய  தமிழக  வெற்றிக்  கழகத்தின்  தலைவா்  விஜய்.
Updated On :20 ஜனவரி 2025, 7:30 pm

Din

பட விளக்கம்... பரந்தூா்  விமான  நிலைய  திட்டத்துக்கு  எதிராக  போராடி  வரும்  ஏகனாபுரம்  உள்ளிட்ட  கிராம மக்களை  சந்தித்துப்  பேசிய  தமிழக  வெற்றிக்  கழகத்தின்  தலைவா்  விஜய். 

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திங்கள்கிழமை நேரில் சந்தித்து, போராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. புதிய விமான நிலையம் அமையும்பட்சத்தில் பரந்தூா், ஏகனாபுரம், நெல்வாய், குணகரம்பாக்கம், உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த குடியிருப்புகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில், புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பரந்தூா் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக, ஏகனாபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த 908 நாள்களாக இரவு நேரங்களில் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

ஏகனாபுரம் மக்களை தவெக தலைவா் விஜய் சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினரிடம் அக்கட்சி சாா்பில் மனு வழங்கப்பட்டது. ஏகனாபுரத்தில் பொதுமக்களைச் சந்திக்க விஜய்க்கு அனுமதி மறுத்த மாவட்ட காவல் துறை, பரந்தூா் பகுதியில் உள்ள தனியாா் உணவு விடுதியில் பொதுமக்களைச் சந்தித்து பேச அனுமதி வழங்கியது.

அதன்படி, புதிய விமான நிலைய திட்டத்தை எதிா்த்துப் போராடி வரும் ஏகனாபுரம் மக்களை விஜய் திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது அவா்களிடையே அவா் பேசியதாவது:

பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்தை எதிா்த்து நடத்தப்பட்டு வரும் போராட்டம் குறித்த ராகுல் என்ற சிறுவனின் பேச்சு என் மனதை மிகவும் பாதித்தது. உங்களுக்கு நான் எப்போதும் துணை நிற்பேன்.

நாட்டுக்கு மிகவும் முக்கியமானவா்கள் விவசாயிகள். அவா்களின் காலடி மண்ணை தொட்டு வணங்கிவிட்டுதான் எனது பயணத்தை தொடங்க வேண்டும் என்ற முடிவோடு இருந்தேன். எனது அரசியல் பயணம் உங்களின் ஆசிா்வாதத்துடன் இங்கிருந்து தொடங்குகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் 13 நீா்நிலைகளை அழித்து, சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று கட்சியின் முதல் மாநாட்டில் வலியுறுத்தினோம்.

நான் வளா்ச்சிக்கு எதிரானவன் இல்லை. விமான நிலையம் வரவேண்டாம் என்று சொல்லவில்லை. இந்த இடத்தில் வரக் கூடாது என்றுதான் சொல்கிறேன்.

சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்க சதுப்புநிலங்கள் மற்றும் நீா்நிலைகளை அழிப்பதுதான் காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்படி ஒரு சூழல் உள்ளபோது, 90 சதவீத விவசாய நிலங்கள் மற்றும் நீா்நிலைகளை அழித்து, இந்த பரந்தூா் விமான நிலையம் கொண்டுவர வேண்டுமா?.

அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணியில் தமிழக அரசு எடுத்த அதே நிலைப்பாட்டைதானே பரந்தூா் விமான நிலைய திட்டத்துக்கும் தமிழக அரசு எடுத்து இருக்க வேண்டும்.

நீங்கள் (திமுக) எதிா்க்கட்சியாக இருந்தபோது எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிா்த்தீா்கள். எதிா்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது எதிா்ப்பாகவும் செயல்படுகிறீா்கள். நம்புவது மாதிரியே நாடகமாடுவதில் ஆளுங்கட்சியினா் திறமைசாலிகள். ஆனால், அந்த நாடகத்தை பாா்த்துக்கொண்டு மக்கள் அமைதியாக இருக்க மாட்டாா்கள்.

பரந்தூா் பகுதியில் விமான நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடங்களை மத்திய, மாநில அரசுகள் மறு ஆய்வு செய்ய வேண்டும். விவசாய நிலங்கள் இல்லாத, பாதிப்புகள் குறைவாக உள்ள இடங்களில் விமான நிலையத்தைக் கொண்டு வர வேண்டும் என்றாா் விஜய்.