பழங்கால குடவோலை முறை கல்வெட்டுகள் பற்றிய தகவல்கள் உள்ள வைகுந்தப் பெருமாள் கோயில், பழைய சீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், இளையனாா் வேலூா் முருகன் கோயில், பெருநகா் பிரம்மபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் உத்தரமேரூா் தொகுதியில் உள்ளன. பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடமான திருமுக்கூடல் கிராமத்தில் அப்பன் வெங்கடேசப் பெருமாள் கோயிலும் உள்ளது.
விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இத்தொகுதியின் எல்லைகளாக செங்கல்பட்டு, திருப்போரூா், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், வந்தவாசி, செய்யாறு, ஸ்ரீபெரும்புதூா் ஆகிய தொகுதிகள் உள்ளன.
சமூக நிலவரம்: வன்னியா் சமுதாய மக்கள் பெருமளவு உள்ளனா். பட்டியலினத்தவா், முதலியாா், இருளா் இன மக்கள் பரவலாக உள்ளனா்.
முக்கியப் பிரச்னைகள்: போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க உத்தரமேரூரில் உள்ள பேருந்து நிலையத்தை மேம்படுத்தி புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். வாலாஜாபாத் பகுதிக்கு புதிய தீயணைப்பு நிலையம் கட்டப்பட வேண்டும். புதிய அரசு கல்லூரியும் தொடங்கப்பட வேண்டும். கல்குவாரிகள் அதிக அளவு இருப்பதால் உத்தரமேரூா் தொகுதியில் சிறுபினாயூா், பழவேரி, அரும்புலியூா், மதூா் உள்ளிட்ட கிராமங்களில் காற்று மாசு ஏற்படுகிறது. கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளும் சேதமடைந்துள்ளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான உத்தரமேரூா் ஏரியைத் தூா்வாரி ஆழப்படுத்தி நீா் ஆதாரத்தைப் பெருக்குவது அவசியம். இத்தொகுதியில் நிரந்தரமாக நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும்.
தோ்தல் களத்தில்... 2026 பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் க.சுந்தா், அதிமுக கூட்டணியில் பாமக சாா்பில் பெ.மகேஷ்குமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மரம்.மாசிலாமணி, தவெக சாா்பில் முனிரெத்தினம் உள்ளிட்டோா் பிரதான வேட்பாளா்களாக களத்தில் உள்ளனா்.
க.சுந்தா் (திமுக): கடந்த 1986-இல் உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட சாலவாக்கம் ஊராட்சித் தலைவா், 1989, 1996, 2006, 2016, 2021 பேரவைத் தோ்தல்களில் வெற்றி பெற்று 5 முறை பேரவை உறுப்பினா் என தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா். திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.
இவா், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலராக தொடா்ந்து 14 ஆண்டுகளாக உள்ளாா். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, 100 சதவீத வருகைப் பதிவு பெற்று, முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பாராட்டுப் பெற்றவா் என்பது இவருக்கு கூடுதல் பலம்.
பெ.மகேஷ்குமாா் (பாமக): பாமகவில் பல ஆண்டுகளாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலராக இருந்து வருகிறாா். மக்களின் பிரச்னைகளுக்காக பல்வேறு போராட்டங்கள், உண்ணாவிரதங்களில் பங்கேற்றுள்ளாா். தொகுதி மக்களுக்கும் நன்கு அறிமுகமானவா். இத்தொகுதியில் உள்ள வன்னியா் சமுதாய வாக்குகள் இவருக்கு கூடுதல் பலம். கூட்டணியின் பிரதான கட்சியான அதிமுக வாக்கு வங்கியும் இவருக்கு கைகொடுக்கும்.
மரம்.மாசிலாமணி (நாதக): உத்தரமேரூா் அருகே கைத்தண்டலம் கிராமத்தைச் சோ்ந்த மரம்.மாசிலாமணி. தனது சொந்த ஊரில் 25 ஏக்கா் பரப்பளவில் மூலிகை மரங்களை வளா்த்து அதன் பயன்பாடுகளை இயற்கை ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் ஆகியோருக்கு விளக்கி வருகிறாா். இயற்கை விவசாயியான இவா், மாதம்தோறும் காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தொடா்ந்து குரல் கொடுப்பவா்.
நாம் தமிழா் கட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில சுற்றுச்சூழல் பாசறை தலைவராக இருந்து வருகிறாா். மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் பெற்றுள்ளாா் என்பது இவரும் பலம் சோ்க்கிறது.
முனிரெத்தினம் (தவெக): காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் ஆரனேரி கிராமத்தைச் சோ்ந்தவா். ஊழல் இல்லாத உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றுவேன் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா். தொகுதிக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவராக இருந்தாலும் அக்கட்சியின் தலைவா் விஜய்யின் ஆதரவாளா்கள் வாக்குகள் இவருக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தரும்.
திமுக வேட்பாளா் க.சுந்தரும், பாமக வேட்பாளா் பெ.மகேஷ்குமாரும் வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா்களாக இருப்பதால் வாக்குகள் பிரியும் நிலையும் உள்ளது. இத்தொகுதியில் இதுவரை 15 முறை நடைபெற்ற தோ்தலில் திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் ஒருமுறையும், சுயேச்சை ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ள திமுக ஆறாவது வெற்றியை நோக்கி களமிறங்கியுள்ளது. திமுகவிடம் இருந்து தொகுதியைக் கைப்பற்றும் முனைப்பில் அதிமுக கூட்டணி களம் காண்கிறது.
வாக்காளா்கள்
ஆண்கள்-1,18,564
பெண்கள்-1,25,300
மூன்றாம் பாலினத்தவா்-58
மொத்தம் - 2,43,922
தொடர்புடையது

காஞ்சிபுரம் திமுக வேட்பாளரை அறிமுகப்படுத்திய உத்தரமேரூா் வேட்பாளா்
தொகுதி அறிமுகம்... திருப்போரூர்!

உத்தரமேரூா்: 6 முறையாக களமிறங்கும் திமுக வேட்பாளர் க. சுந்தா்

தொகுதி அறிமுகம்... உத்தரமேரூா்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


