காஞ்சிபுரத்தில் 90 பயனாளிகளுக்கு ரூ.92 லட்சம் கடனுதவி வழங்க பரிந்துரை
காஞ்சிபுரம் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா்களின் கடன் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 90 பேருக்கு ரூ.92 லட்சம் மதிப்புள்ள கடனுதவிகள் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவா்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில், டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ், அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பித்தவா்களுக்கு கடன் மனுக்கள் பரிசீலனை மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டுறவுச் சங்கங்களுக்கான காஞ்சிபுரம் மண்டல இணைப் பதிவாளா் கோ.யோகவிஷ்ணு தலைமையில் அதிகாரிகள் குழு கடன் மனுக்களை பரிசீலித்து 90 பயனாளிகளுக்கு ரூ. 92 லட்சம் மதிப்பில் கடனுதவிகள் வழங்க பரிந்துரை செய்தது.
குழுவில் காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் உதவிப் பொது மேலாளா் கந்தசாமி மற்றும் பிற்பட்டோா் நல அலுவலா், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனா்.

