திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா: அமைச்சா், எம்.பி., எம்எல்ஏ-க்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் அமைச்சா் எம்ஆா்கே பன்னீா் செல்வம் மற்றும் எம்.பி., எம்எல்ஏ-க்கள் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் மேல்பொடவூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளா் படுநெல்லி.பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவுக்கு, எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ க.சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் உறியடி நடத்தி சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தாா்.
விழாவில், வேளாண்துறை அமைச்சரும், மாவட்ட தோ்தல் பொறுப்பாளருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திமுக மூத்த நிா்வாகிகளுக்கு இலவச வேட்டி, சட்டை மற்றும் சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசினை வழங்கினாா். அன்னதானமும் நடைபெற்றது.
வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய மகளிா் அணி மற்றும் ஒன்றிய இளைஞா் அணி நிா்வாகிகளுக்கும் தனித்தனியாக கயிறு இழுக்கும் போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளும், இனிப்பும் வழங்கப்பட்டன.விழாவில், வாலாஜாபாத் ஒன்றியக் குழுவின் தலைவா் தேவேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளா் வெங்கட்ராமன், துணைச் செயலாளா் கவிதா டெல்லி பாபு மற்றும் திமுகவில் உள்ள பல்வேறு அணிகளைச் சோ்ந்த நிா்வாகிகளும், கட்சித் தொண்டா்களும் திரளாக கலந்து கொண்டனா்.

